பனாஜி: கோவா மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் நில்கந்த் ஹலர்ங்கர். வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள ரெவோரா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு புறப்பட்ட போது அங்கு ‘பாம்பே பேகம்ஸ்’ மற்றும் ‘நக்சல்பாரி’ ஆகிய வெப் சீரியல்கள் மற்றும் சில படங்களில் நடித்த நடிகர் கவுரவ் பக்ஷி தனது காரை அங்கு நிறுத்தியிருந்தார். அவரது காரை அகற்றும்படி கேட்ட போது அமைச்சரின் பாதுகாவலரை நடிகர் கவுரவ் பக்ஷி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பிரச்னை உருவானது. இதுபற்றி கோல்வாலே போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் நில்கந்த் மற்றும் நடிகர் கவுரவ் பக்ஷியும் தனித்தனியாக புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று நடிகர் கவுரவ் பக்ஷியை கோவா போலீசார் கைதுசெய்தனர்.
* துப்பாக்கியை எடுத்து மிரட்டினார் நடிகர் விளக்கம்
அமைச்சர் மோதல் தொடர்பாக நடந்தது என்ன என்பது தொடர்பாக நடிகர் கவுரவ் பக்ஷி கூறும்போது,’ போக்குவரத்துக்கு இடையூறாக அமைச்சர் கார் நின்றது. அந்த காரை அப்புறப்படுத்துமாறு கேட்டேன். அமைச்சரின் காருக்குள் இருந்த பாதுகாப்பு அதிகாரி எனது காரை அங்கிருந்து நகர்த்தாவிட்டால் என்னை அடிப்பேன் என்று கூறினார். ஒருகட்டத்தில் அவரது துப்பாக்கியை எடுத்து காட்டி அச்சுறுத்தினார். அதனால் நான் எனது செல்போன் மூலம் மிரட்டுவதை வீடியோ எடுத்தேன்’ என்றார்.
The post பா.ஜ அமைச்சரின் காரை தடுத்ததாக நடிகர் கைது: கோவா போலீசார் அதிரடி appeared first on Dinakaran.