மாஞ்சோலை மக்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் : தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை

நெல்லை : மாஞ்சோலை மக்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி 3 நாட்களில் 75% கருணைத்தொகையை தொழிலாளர் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலையில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி உள்ளிட்ட நான்கு பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உள்ளது.இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர். 1929 ம் ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது.

2028ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை காலி செய்ய முடிவு செய்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்த நிலையில், மாஞ்சாலையில் இருந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டது. மேலும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை செய்ய அரசின் டான்டீ நிறுவனம் முன்வர வேண்டும் எனவும், இந்த விவகாரத்தை மனிதத் தன்மையோடு அணுக வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மாஞ்சோலை மக்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு ஏற்கனவே 25 சதவீதம் கருணைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 75 சதவீத கருணைத் தொகை உதவி தொழிலாளர் ஆணையரிடம் மூன்று நாட்களில் வழங்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post மாஞ்சோலை மக்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் : தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: