ஒரு குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள். தாய் தன்னை கவனிக்க வேண்டும் என்று அந்த குழந்தை தனக்கே உரிய முறையில் அழுகிறது. ஆர்ப்பாட்டம் செய்கிறது. கணவனின் கவனத்தைக் கவர்வதற்காக மனைவி சில கவனயீர்ப்பு செய்கைகளைச் செய்கிறாள். அது அலங்காரமாக இருக்கலாம். அல்லது அழுகையாகவும் இருக்கலாம். அலங்காரம் பயன்படாத இடத்தில் அவள் அழுகையை ஆயுதமாகப் பயன்படுத்துகிறாள் இந்த உளவியலை சமூகத்திலும் கொண்டு போகலாம். ஒரு காரியம் ஆக வேண்டும் என்று 10 பேர் சேர்ந்துகொண்டு ஒரு அதிகாரியிடம் சென்று விண்ணப்பம் தருகிறார்கள். பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. பத்துப் பேரும் சேர்ந்துகொண்டு சாலைக்கு நடுவில் உட்கார்ந்து மறியல் செய்கிறார்கள். அதிகாரிக்குத் தகவல் போகிறது. எந்த அதிகாரிக்கு காத்திருந்து இவர்கள் விண்ணப்பம் தந்தார்களோ, அந்த அதிகாரி இப்பொழுது இவர்கள் இருக்கும் இடத்திற்கு வருகின்றார். பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
இதே உளவியலைத்தான் மந்தரை (கூனி) சொல்லிக் கொடுத்து கைகேயி பயன்படுத்துகின்றாள். இராமனின் மகுடாபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு தனக்குப் பிரியமான கைகேயியின் மாளிகைக்குள் நுழைகிறான் தசரதன். கைகேயியின் அரண்மனைப் பணிப்பெண்கள் வரவேற்க தசரதன் கம்பீரமாக கைகேயியின் மாளிகைக்குள் நுழைகிறான். வழக்கத்திற்கு மாறாக மாளிகை இருண்டு கிடக்கிறது.
‘‘யாழ் இசை அஞ்சிய அம்சொல்’’ என்று கைகேயியை கம்பன் இந்த இடத்தில் குறிப்பிடுவதற்குக் காரணம், யாழின் நரம்புகள் மிகச் சரியாக இருக்கின்ற நேரத்தில் இனிய இசையை எழுப்பும். அந்த நரம்புகளில் ஒன்று அறுந்து போனாலோ துவண்டு போனாலோ இசை அபஸ்வரமாக ஒலிக்கும்.
கைகேயி என்கிற யாழின் நரம்பை மந்தரை துவண்டு போகச் செய்துவிட்டாள். அதனால் இனிமேல் தசரதன் கேட்கின்ற சொற்கள் எல்லாமே அபஸ்வரமான சொற்கள்தான் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்காக இந்த வார்த்தையை கம்பன் பயன்படுத்துகிறார். எதிர்மறை விஷயங்களைச் சொல்லுகின்றபொழுது சில இடங்களில் இப்படி நேர்மறை விஷயங்களைப் பயன்படுத்துவது உண்டு.
துவண்டுபோய் கிடக்கும் கைகேயியின் நிலை பார்த்து தசரதன் துடிக்கின்றான். அவளைக் கையோடு தூக்கி எடுக்கின்றான். தூக்கி எடுத்த கையை தூரத்தில் தள்ளிவிட்ட கைகேயி மின்னல் ஒன்று பூமியில் விழுவதுபோல படுக்கையில் விழுகிறாள். எப்பொழுதும் இனிமையாக முகமன் கூறி வரவேற்பவள் இன்று ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பதைக் கண்டு தசரதன் துடிக்கின்றான்.
‘‘என்ன நடந்தது? எதற்காக இப்படி இருக்கிறாய்? உன்னை இகழ்ந்து பேசியவர் யார்? அவர்கள் யாராக இருந்தாலும் இப்பொழுதே அவர்கள் உயிரை முடிப்பேன்?’’ என்றெல்லாம் கோபத்தோடு பேசுகின்றான். எதைக் கேட்டாலும் தசரதன் செய்வதற்குத் தயாராக இருக்கின்றான் என்பதைத் தெரிந்துகொண்ட கைகேயி அழுது கொண்டு ‘‘உங்களுக்கு என்னிடம் உண்மையிலேயே கருணை இருக்குமானால் முன்பு சொன்னீர்களே, இரண்டு வரங்கள், அந்த இரண்டு வரங்களையும் கொடுக்க வேண்டும்.’’
பெரிய புராணத்தில் (சிறுத்தொண்டர் புராணத்தில்) தலைமகனை அறுத்து தலைக்கறி சமைத்துத் தர வேண்டும் என்று சிவனடியார் கேட்பார். அப்படி கேட்டதுகூட ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் தந்தையும் தாயும் அந்தக் குழந்தையை அறுக்கும் பொழுது ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும் என்று கேட்பார் பாருங்கள் அதைப்போல தசரதன் வரம் தரும் பொழுது கொஞ்சம் கூட மனதிலே துன்பம் இருக்கக்கூடாது என்று கைகேயி கேட்கிறாள்.
‘‘உண்டு கொலாம் அருள் என் கண்
உன் கண் ஒக்கின் பண்டைய
இன்று பரிந்து அளித்தி’’
என்ற வரியில் இந்த நுட்பம் ஒளிந்து கிடக்கிறது.
இப்பொழுது தசரதன் மறுபடியும் ஒரு தவறு செய்கின்றான். இது பெரும்பாலும் எல்லா கணவன்மார்களும் செய்கின்ற தவறுதான். முன்பு இப்படித்தான் கைகேயி கேட்காமலேயே வரம் கொடுத்தான். இப்பொழுதும் யோசிக்காமல் உறுதிமொழி தருகிறான். அதுவும் ‘‘ராமன் மீது ஆணையிட்டு, நீ எது கேட்டாலும் தருவேன்’’ என்று உறுதி தருகிறான் சூழ்நிலைகளைத் தெரிந்துகொள்ளாது, அவள் என்ன கேட்பாள் என்பதையும் புரிந்து கொள்ளாது வெறும் உணர்ச்சி வேகத்தில் அவன் உறுதி தந்ததால் ஏற்பட்ட விளைவுகள் என்னென்ன தெரியுமா? கம்பன் மிக அழகான பாடலிலே சொல்லுகின்றான்.
கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்
வெள்ள நெடுஞ் சுடர் மின்னின் மிக்க நக்கான்
உள்ளம் உவந்துள செய்வேன் ஒன்றும் லோபேன்
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான்
“வள்ளல் ராமன் மீது ஆணை என்று சொல்லவில்லை என்னுடைய மைந்தனான இராமன் மீது ஆணை என்றும் சொல்லவில்லை. நீ எந்தப் பிள்ளையை ஆசையோடு வளர்த்துக்கொண்டிருந்தாயோ அந்த இராமன் (இராமன் உன் மைந்தன்) மீது ஆணையிட்டுச் சொல்லுகின்றேன். நீ என்ன விரும்புகின்றாயோ அதைச் செய்வதற்கு தயாராக இருக்கின்றேன்” என்கின்றான்.
இந்த ஒரு வார்த்தையைச் சொன்னதற்காகவே கைகேயி தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் விதி விளையா டுகின்ற பொழுது அது ஒவ்வொருவர் நாக்கிலும் புகுந்து தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு காரியங்களை நடத்திச் செல்லும் என்பதற்கு இந்தக் கட்டம் ஒரு உதாரணம். கைகேயி, “என்னுடைய துன்பத்தைத் துடைப்பதற்காக நீ வரம் தருவதாக ஏற்றுக் கொண்டாய். அதற்கு தேவர்கள் கூட்டமே சாட்சி” என்று சொல்ல, தசரதன் மறுபடியும் சொல்லுகின்றான்.
‘‘நீ தயங்க வேண்டாம். உனக்கு என்ன வேண்டுமோ கேள். நீ ஏதோ ஒரு துன்பத்தில் இருக்கிறாய்” நீ துன்பத்தில் இருப்பதால் நானும் துன்பத்தில் இருக்கின்றேன். உன்னுடைய துன்பமும் குறைய வேண்டும். என்னுடைய
துன்பமும் குறைய வேண்டும்.’’
இங்கு கைகேயி சொல்லுகின்ற ஒரு வார்த்தை ‘‘தேவர்கள் சாட்சியாக நீ ஏற்றுக் கொண்டாய்.’’ காரணம் இங்கே தேவர்களெல்லாம், எங்கே கைகேயி மனம் மாறிவிடுவாளோ, அப்படி மனம் மாறிவிட்டால் காரியம் கெட்டுவிடுமே, ராவண வதம் நடைபெறாதே, ராமனுடைய அவதார நோக்கம் நிறைவேறாதே, தங்களுடைய துன்பங்கள் குறையாதே என்று நினைக்கின்றார்களாம். அதனால்தான் இந்த இடத்தில் கம்பன் மிக நுட்பமாக ‘‘சான்று இமையோர் குலம்’’ என்று கச்சிதமாகப் பாடலில் சேர்த்திருக்கின்றான்.
இப்பொழுது கைகேயிக்குத் தன்னுடைய காரியம் நடந்துவிடும் என்பது தெரிகிறது. இரண்டு வரங்கள் கேட்கிறாள். அந்த வரங்களை கம்பன் பாடலிலே காட்டுகின்றான்.
ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவிலும் சிறந்த தீயாள்
இந்த வரத்தைக் கேட்டு தசரதன் மயங்கி விழுகிறான். இப்பொழுது கைகேயியின் மயக்கம் தீருகிறது தசரதனின் மயக்கம் வளர்கிறது.
The post கவனத்தைக் கவர்தல் எனும் உளவியல் appeared first on Dinakaran.