மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 81,652 குடும்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு

*புதிதாக 142 ரேஷன் கடைகள் தொடக்கம்

சேலம் : சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 81,652 குடும்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதுடன், 142 ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் வழங்கும் வகையில், பொதுவிநியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 34,790 ரேஷன் கடைகளில், 2.23 கோடி ஸ்மார்ட் கார்டுகள் மூலம், சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்காக மாதந்தோறும் விலையில்லாமல் அரிசியும், குறைந்த விலையில் பருப்பு, சர்க்கரை, பாமயில் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ரேஷன் கடைகள் மூலம் வழங்கக் கூடிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் முதல் கூட்டுறவு சங்க அதிகாரிகள் வரை நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் வசதிக்காக புதிதாக ரேசன் கடைகள் உருவாக்கப்படுவதுடன், தகுதியான அனைவருக்கும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 1,262 முழுநேரம், 470 பகுதிநேரம் என மொத்தம் 1,732 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளுடன் 10,99,898 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை, மாதந்தோறும் சராசரியாக 21,200 மெட்ரிக் டன் அளவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 81,652 குடும்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதுடன், 142 ரேஷன் கடைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் புதிதாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுவதுடன், ரேசன் கடைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இல்லாத வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 106 முழுநேரம் மற்றும் 36 பகுதிநேரம் என மொத்தம் 142 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 70,447 குடும்ப அட்டைகளில் உள்ள 2,39,884 உறுப்பினர்கள் பயனடைந்து வருகின்றனர்.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள் பொதுமக்களுக்கு முழுவீச்சில் சென்றடையும் வகையில் ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் புதிய ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களில், தகுதியுள்ளவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் விரைவாக வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. பொதுமக்களில் புதிய ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளில் புதியதாக 81,652 ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்கள் தங்குதடையின்றி தங்களது அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில், தற்போது 480 கடைகள் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன. வாடகையில் செயல்பட்டு வரும் அக்கடைகளுக்கு பல்வேறு அரசு திட்டத்தின் கீழ், புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் ₹13.10 கோடி மதிப்பீட்டில் 103 புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 103 ரேஷன் கடை கட்டடங்களில், 47 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 56 ரேஷன் கடை கட்டிடங்களின் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வர்ணம் பூசுதல், தேவையான கட்டிடங்களுக்கு மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 470 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மூலம், பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தரமானதாக அனைத்து நுகர்வோருக்கும் கிடைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார்.

The post மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 81,652 குடும்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு appeared first on Dinakaran.

Related Stories: