பள்ளி ஆசிரியையிடம் தாலி செயின் பறித்த 2 வாலிபர்கள் கைது

 

சிதம்பரம், ஜூலை 8: சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தம்பி பிள்ளை. இவரது மனைவி ரம்யா தேவி(42). இவர் அண்ணாமலை நகர் அருகே கடவாச்சேரி பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி கடவாச்சேரி பஸ் நிறுத்தம் அருகே பணி முடிந்து பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 9 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பினர்.

கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில், சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மேற்பார்வையில், அண்ணாமலை நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கல்பணா தலைமையில், சிதம்பரம் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாபு, கோபி, தலைமை காவலர்கள் ராஜீவ் காந்தி, கணேசன், பாலாஜி, ஞானப்பிரகாசம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆய்வு செய்து வந்தனர்.

மேலும் சைபர் கிரைம் தலைமை காவலர்கள் பாலமுருகன், பத்மநாபன் ஆகியோர் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர்.அதில், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வடக்கு மாங்குடி இந்திரன் மகன் கோகுலேஷ்(22), கொரடாச்சேரி பெருமாளகரம்  கிலேரியோயோ கொல்லை பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் நிதீஷ்(20) ஆகிய 2 பேரும் ஆசிரியையிடம் தாலி செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து கோகுலேஷ், நிதீஷ் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 9 பவுன் தாலி செயினை பறிமுதல் செய்தனர்.

The post பள்ளி ஆசிரியையிடம் தாலி செயின் பறித்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: