மாணவ, மாணவிகள் சேர்க்கை அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

சிவகங்கை, ஜூலை 5: தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 2024-2025ம் ஆண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஏற்கனவே இணையத்தளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது இரண்டு கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில் மொத்தம் இடங்களில் 63 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதையடுத்து மீண்டும் கடந்த 3ம் தேதி முதல் இன்று (ஜூலை 5) வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரிமாணவர் சேர்க்கைக்கு ஏற்கனவே 2 கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 8அன்று ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், ஜூலை 9அன்று புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும், ஜூலை 10அன்று அனைவருக்கும் நடைபெற உள்ளது.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் காலை 9.00 மணிக்கு முன்பு கல்லூரிக்கு வர வேண்டும். காலதாமதமாக வருவோர் தரவரிசையிலான சேர்க்கை வாய்ப்பை இழக்க நேரிடும். விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ், 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், வருமான சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல் மற்றும் 3 நகல்களுடன், 5 போட்டோக்களும் கொண்டு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மாணவ, மாணவிகள் சேர்க்கை அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி appeared first on Dinakaran.

Related Stories: