திருப்போரூர் பகுதியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள்: விபத்து அபாயம் அதிகரிப்பு

திருப்போரூர்: திருப்போரூர் பகுதி சாலைகளில் ஏராளமான மாடுகள் வாகனங்களை மறித்தபடி கடந்து செல்கின்றன. இதனால் அப்பகுதியில் மாடுகள் முட்டுவதால் படுகாயம், வாகனங்கள் மோதல் உள்பட பல்வேறு விபத்து அபாயங்கள் அதிகரிக்கும் நிலை உள்ளது. திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம் ஆகிய 3 கிராமங்களில் 75க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், திருப்போரூர் பேரூராட்சியில் பெருகி வரும் அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய வீட்டுமனை பிரிவுகளால் அபரித வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கிடையே, திருப்போரூரில் முருகன் கோயிலை சுற்றியுள்ள மடம் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கச்சேரி சந்து தெரு, சான்றோர் வீதி, கண்ணகப்பட்டு கங்கையம்மன் கோயில் தெரு, மேட்டுத்தெரு ஆகிய பகுதிளை சேர்ந்த மக்கள் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இவர்கள், தங்களின் மாடுகளை சாலைகளில் திரியும்படி விட்டுவிடுகின்றனர். இதனால் அம்மாடுகள் ஓஎம்ஆர் சாலை உள்பட பல்வேறு பகுதி சாலைகளில் வாகனங்களை மறித்தபடி கடந்து செல்கின்றன.

மேலும், அவ்வழியே தங்களை விரட்ட வருபவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை விரட்டி முட்டுகின்றன. இதில் பலர் படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், ஒருசில மாடுகள் சாலையில் நின்றபடியும், படுத்து ஓய்வெடுப்பதால், அங்கு வேகமாக வரும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே கடந்து செல்ல வேண்டி உள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து, சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தது. எனினும், தற்போது சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. எனவே, ஓஎம்ஆர் உள்பட பல்வேறு சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள்மீது மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

The post திருப்போரூர் பகுதியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள்: விபத்து அபாயம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: