திருவாடானை அருகே ஹைமாஸ் மின்விளக்கை பழுது நீக்க கோரிக்கை

திருவாடானை, ஜூன் 29: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் வழியாக தொண்டி – மதுரை தேசிய நெடுஞ்சாலையும், திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது. இந்த இரு தேசிய நெடுஞ்சாலைகளும் சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா பகுதி அமைந்துள்ளது. இந்த ரவுண்டானா பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்த விளக்கு தற்போது எரியாததால் அந்தப்பகுதி இருளடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியை சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. நான்கு திசையிலும் வரும் வாகனங்களை சரியாக கவனிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

இந்த ரவுண்டானாவின் அருகிலேயே நான்கு புறமும் நான்கு பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதனால் அந்த பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகளும் அவதியடைகின்றனர். எனவே நான்கு ரோடு சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின்விளக்கை உடனடியாக பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாடானை அருகே ஹைமாஸ் மின்விளக்கை பழுது நீக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: