திருவனந்தபுரம்: கொல்லம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு வழக்கில் மதுரையைச் சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள் என கொல்லம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள முன்சிப் நீதிமன்றத்தின் அருகே ஒரு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து கொல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வந்தது.
இதில் 2017ம் ஆண்டு இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் அலி, சம்சுல் கரீம் ராஜா, தாவூத் சுலைமான் மற்றும் சம்சுதீன் ஆகிய நான்கு பேரை என்ஐஏ கைது செய்தது. விசாரணையில் இவர்கள் தடை செய்யப்பட்ட பேஸ் மூவ்மென்ட் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு, கர்நாடக மாநிலம் மைசூரு, ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்பிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அகமதாபாத்தில் இஷ்ரத் ஜகான் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டு வெடிப்பை நடத்தியதாக இவர்கள் போலீசிடம் தெரிவித்தனர்.
இந்த வழக்கு கொல்லம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட அப்பாஸ் அலி, சம்சுல் கரீம் ராஜா மற்றும் தாவூத் சுலைமான் ஆகியோர் குற்றவாளிகள் என்று நேற்று நீதிமன்றம் அறிவித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் சம்சுதீனை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 பேரின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 8 வருடங்கள் சிறையில் இருந்து விட்டதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று இவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
The post கொல்லம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள்; கேரள நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.