மகாராஷ்டிரா பேரவை தேர்தலுக்கு முன் பாஜகவில் இருந்து விலகிய மாஜி ஒன்றிய அமைச்சர்: பல கட்சியை பார்த்தவர் அடுத்து எந்த கட்சிக்கு?

மும்பை: மகாராஷ்டிரா பேரவை தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இருந்து விலகிய மாஜி ஒன்றிய அமைச்சர் சூரியகாந்த் பாட்டீல் விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து கடந்த 2014ல் முன்னாள் ஒன்றிய அமைச்சரான சூர்யகாந்த பாட்டீல் பாஜகவில் சேர்ந்தார். கடந்த 10 ஆண்டாக பாஜகவில் இருந்த நிலையில், மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மக்களவை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு பாஜகவில் சீட் தரவில்லை.

மாறாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு ஹிங்கோலி தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிடம் ஏக்நாத் ஷிண்டேவின் வேட்பாளர் தோற்றார். இந்நிலையில் அதிருப்தியில் இருந்த சூர்யகாந்த பாட்டீல், தற்போது பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 10 ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொண்டேன்; பாஜகவுக்கு நன்றி கூறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, சூர்யகாந்த பாட்டீல், ஹிங்கோலி-நாந்தேட் தொகுதியில் 4 முறை எம்பியாக ேதர்வு செய்யப்பட்டார்.

ஒரு முறை எம்எல்ஏவாகவும் தேர்வானார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணை அமைச்சராகவும் இருந்தார். இந்த நிலையில் தேசியவாத காங்கிரசில் இருந்து பாஜகவில் சேர்ந்த சூர்யகாந்த பாட்டீல், தற்போது பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார். ஏற்கனவே இவர் காங்கிரசில் இருந்து தான் தேசியவாத காங்கிரசுக்கு மாறினார். பல கட்சிகளில் தாவிய சூர்யகாந்த பாட்டீல், விரைவில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் எந்த கட்சிக்கு தாவப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

The post மகாராஷ்டிரா பேரவை தேர்தலுக்கு முன் பாஜகவில் இருந்து விலகிய மாஜி ஒன்றிய அமைச்சர்: பல கட்சியை பார்த்தவர் அடுத்து எந்த கட்சிக்கு? appeared first on Dinakaran.

Related Stories: