வகுப்பறை கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்த தொழிலாளி

*ஆரல்வாய்மொழி அருகே பரபரப்பு

ஆரல்வாய்மொழி : குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. கட்டிடப்பணியை நாகர்கோவிலை சேர்ந்த ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார். இங்கு பணிபுரியும் 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
இதில் தூத்துக்குடி மாவட்டம் தவசிநகர் பகுதியை சேர்ந்த ஜாண் மகன் செல்வராஜ் (54) என்பவரும் உடன் தங்கியிருந்தார். இவர் 15 கட்டிட பணியாளர்களுக்கு சமையல் செய்து கொடுப்பது, கட்டுமான பொருட்களுக்கு இரவுநேர காவலாளியாக இருப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார். கடந்த 3 மாதமாக இந்த பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் கட்டிட பணியாளர்கள் அனைவரும் தூங்க சென்றனர். நேற்று காலை அவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது பள்ளியின் முன்புறம் உள்ள ஒரு தண்ணீர் குழாய் அருகே செல்வராஜ் அசைவற்று கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில் செல்வராஜ் சொட்ட சொட்ட நனைந்தபடி சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

உடனே கட்டிட ஒப்பந்ததாரருக்கு பணியாளர்கள் தகவல் கொடுத்தனர். அவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் உதவி ஆய்வாளர் கீதா, ஏட்டு உதயா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது செல்வராஜ் ஏற்கனவே இறந்து கிடந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்வராஜுக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்று சக பணியாளர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் அவரது ஒற்றைக்கால் செருப்பு சற்று தொலைவில் கிடந்துள்ளது. எனவே அதிகாலையில் தண்ணீர் பிடிக்க செல்வராஜ் வந்திருக்கலாம். அப்போது வலிப்பு ஏற்பட்டதால் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டிருக்கும். உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே செல்வராஜ் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும். செல்வராஜ் இறந்த தகவல் கோயம்புத்தூரில் பணிபுரியும் அவரது மகன் ராஜேஷுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் உடனே புறப்பட்டு வந்தார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வகுப்பறை கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்த தொழிலாளி appeared first on Dinakaran.

Related Stories: