ரூ.9,771 கோடி மட்டுமே இருப்பு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு 70 சதவீதம் சரிந்தது

ஜூரிச்: சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கிகளில் இந்தியர்கள் மற்றும் அங்குள்ள இந்திய நிறுவனங்கள் பணம் டெபாசிட் செய்து வைத்துள்ளனர். வங்கிகள் ஆண்டுதோறும் டெபாசிட் உள்ளிட்ட நிதி நிலை விவரங்களை சுவிஸ் மத்திய வங்கிக்கு வழங்குகின்றன. இதன் அடிப்படையில் சுவிஸ் வங்கி ஆண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிடுகிறது. இந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டுக்கான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில்இந்தியர்கள் மேற்கொண்டுள்ள டெபாசிட் தொகை கடந்த 2023ம் ஆண்டில் 104 கோடி சுவிஸ் பிராங்க் ஆகஉள்ளது. இது, இந்திய மதிப்பில் ரூ.9,771 கோடியாகும். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த டெபாசிட் தொகை 70 சதவீதம் குறைவு, என குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு 2021ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் தொகை , 14 ஆண்டுகளில் இல்லாத உச்சமாக 383 கோடி சுவிஸ் பிராங்க், அதாவது ரூ.36,000 கோடியாக இருந்தது. 2006ம் ஆண்டு சுவிஸ் வங்கிகள், நிதி நிறுவனங்களில் இந்தியர்களின் டெபாசிட் தொகை ரூ.6,10,427 கோடியாக இருந்தது. அதன்பிறகு 2011, 2013, 2017, 2020 மற்றும் 2021 ஆண்டுகளை தவிர மற்ற ஆண்டுகளில் இந்த டெபாசிட் தொகை படிப்படியாக குறைந்து கொண்டே வந்துள்ளது. சுவிட்சர்லாந்து, இந்தியர்கள் கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் சொர்க்க பூமியாக கருதப்பட்டு வருகிறது. சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தை மீட்க ஒன்றிய பாஜ அரசு 2015ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் கொண்டு வந்த பிறகு தான், 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு 2021ல் ரூ.20,700 கோடியாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.9,771 கோடி மட்டுமே இருப்பு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு 70 சதவீதம் சரிந்தது appeared first on Dinakaran.

Related Stories: