அத்திப்பட்டு ஊராட்சியில் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட மண்புழு உரம்: பொதுமக்கள் அமோக வரவேற்பு

பொன்னேரி: அத்திப்பட்டு ஊராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு, ஒரு டன் அளவிற்கு தயார் நிலையில் உள்ளது. இது கிலோ ரூ.20க்கு விற்கப்பட்டு வருவதால் பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தலின்படி மீஞ்சூர் ஒன்றியம், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கெனவே குப்பைகள் பிரித்தெடுக்கும் பிரத்யோக வாகனமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்கும் குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் நாள் ஒன்றுக்கு கடையில் இருந்து வெளியேற்றப்படும் காய்கறிகளில் ஒரு டன் வரை கிடைக்கிறது.

இதில், மக்கும் குப்பையாக வாழ இலை, காய்கறிகள் பிரித்தெடுக்கப்பட்டு, இந்த கழிவுகளை மட்டும் பாதுகாக்கப்பட்டு, மண் புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மக்கும் குப்பையை உட்கொள்ளும் மண்புழுக்கள் அவற்றை இயற்கை உரமாக மாற்றுகிறது. காய்கறிகள் சேகரிக்கப்பட்ட நாளிலிருந்து அந்த குப்பையை மற்றும் மண்புழுக்கள் உணவாக உட்கொண்டு கழிவுகளை வெளியேற்ற நூறு நாட்கள் வரை ஆகிறது. நீண்ட கால செயலாக இருந்தாலும் இந்த முறையில் கிடைக்கும் இயற்கை உரத்திற்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தற்போது ஒரு டன் அளவிற்கு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த இயற்கை உரம் கிலோ ரூ.20க்கு என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் எம்.ஜி.டி.கதிவேல் ஆகியோர் முன்னெடுத்து முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு கிடைக்கும் வாழை மரக்கன்றுகளை விஷேகம் முடிந்த பிறகு தூய்மை பணியாளர்களை அனுப்பி பெறப்பட்டு குப்பைகளை சேகரிப்பட்டு வருகிறது. அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் வாழைக் கழிவுகளை தினசரி அதிகளவில் சேர்க்கின்றனர். இதன் மூலம் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. காய்கறி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மண்புழு உரங்கள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.20 நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் 10, 20 கிலோ என்று மொத்தமாக வாங்கிச் சென்று தங்கள் நிலங்களுக்கு உரமாக இடுகின்றனர். அது மட்டுமின்றி பொதுமக்கள் 1, 2 கிலே என்று வாங்கிச் சென்று தங்களின் வீட்டு செடிகளுக்கு உரமாக போடுகின்றனர். இவ்வாறு அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

The post அத்திப்பட்டு ஊராட்சியில் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட மண்புழு உரம்: பொதுமக்கள் அமோக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: