செங்குன்றம் அருகே புள்ளிலைன் ஊராட்சியில் புதிதாக சிமென்ட் சாலை அமைப்பு: பொதுமக்கள் பாராட்டு

புழல்: செங்குன்றம் அருகே புள்ளிலைன் ஊராட்சியில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். புழல் ஊராட்சி ஒன்றியம் செங்குன்றம் அடுத்த புள்ளி லைன் ஊராட்சிக்குட்பட்ட திருமலைவாசன் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி சரியில்லாததால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தனர். சாலையை சீரமைக்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷை நேரில் சந்தித்து பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிதியிலிருந்து சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. திமுக மாவட்ட பிரதிநிதி ரமேஷ் மற்றும் புள்ளி லைன் ஊராட்சி திமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சென்னை வடகிழக்கு திமுக மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். புதிதாக சிமென்ட் சாலை அமைத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post செங்குன்றம் அருகே புள்ளிலைன் ஊராட்சியில் புதிதாக சிமென்ட் சாலை அமைப்பு: பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: