எளாவூர் சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சாலையோர வியாபாரிகள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், கலெக்டரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரை சுற்றியுள்ள சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். இவர்கள் இதே பகுதியில் அமைந்துள்ள சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை ஓரம் சிறு கொட்டகைகள் அமைத்து தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறி, கிழங்கு மற்றும் கீரை வகை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறையினர் சாலையோர கொட்டகைகளை அமைக்க மறுப்பு தெரிவித்து வருவதால் தங்களின் விலை பொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விலைப் பொருட்கள் அழகி வீணாகிறது. இதனால் எளாவூர் ரயில் நிலையம் அருகாமையில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு கடைகள் கட்டி சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்காதால் கடந்த 10ம் தேதி சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் நேற்று திடீரென வியாபாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் இல்லாததால் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் ஜமாபந்திக்கு வரும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

The post எளாவூர் சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Related Stories: