ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி பகுதிகளில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்சய சட்டம் ஆகிய புதிய 3 குற்றவியல் சட்டங்களை ஒன்றிய பாஜ அரசு உருவாக்கியிருக்கிறது. அந்த மூன்று சட்டங்களும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும், இந்த சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திருவள்ளூர் ஒருங்கினைந்த நீதிமன்ற நுழைவுவாயலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமான வி.ஆர்.ராம்குமார், மூத்த வழக்கறிஞர் எஸ்.கே.ஆதாம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்பாட்டத்தில் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுந்தரேசன், திருவள்ளூர் அனைத்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் முரளி, ஜெய்சுந்தர், லேமுவேல் மற்றும் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்துக் கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பூந்தமல்லி: மூன்று குற்றவியல் சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று பூந்தமல்லி நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். செயலாளர் கோபு என்கிற கௌதமன் கோபு முன்னிலை வகித்தார். இதில் கூட்டமைப்பின் மண்டல செயலாளர் பாலமுருகன், துணைத்தலைவர் ஜேம்ஸ், இணை செயலாளர் சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் ஆதிசேஷன், சக்கரவர்த்தி, சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்‌. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது புதிதாக கொண்டுவரப்பட உள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை கண்டித்தும், உடனடியாக இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கோபிநாதன், மாநிர் நம்பி, கங்கா, செழியன், முரளி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள், கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ஆனந்தபாபு நன்றி தெரிவித்தார். வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருத்தணி: திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் 50க்கும் மேற்பட்டார் ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்துவதை கண்டித்தும், அந்த சட்டங்கள் திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: