ரூ.1749 கோடியில் கட்டப்பட்ட நாளந்தா பல்கலை. வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: உலகின் அறிவு மையமாக இந்தியா மாறும் என பேச்சு

ராஜ்கிர்: பீகாரின் ராஜ்கிரியில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில் ரூ.1749 கோடியில் கட்டப்பட்ட புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது, ‘கல்வி, அறிவுக்கான உலகளாவிய மையமாக இந்தியா மீண்டும் மாறும்’ என நம்பிக்கை தெரிவித்தார். பீகாரில் கடந்த 5ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் சுமார் 800 ஆண்டுகள் சர்வதேச அறிஞர்களின் நூல்கள், ஆய்வுகளோடு சிறப்பாக செயல்பட்டது. 12ம் நூற்றாண்டுக்குப் பின் பல்வேறு படையெடுப்புகளால் இப்பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டது.

பின்னர், கடந்த 2010ல் நாளந்தா பல்கலைக்கழக சட்டம் கொண்டு வரப்பட்டு, 2014ல் மீண்டும் நாளந்தா கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு ரூ.1749 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வளாக திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடந்த 2016ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பழங்கால நாளந்தா மகாவிஹாராவின் இடிபாடுகளை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் நிதிஹ் குமார், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைத்து வளர்ந்த நாடுகளும், கல்வியில் முத்திரை பதித்த பின்னரே பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் தலைமையிடமாக மாறின. நாளந்தா, விக்ரமஷிலா போன்ற கல்வி நிலையங்கள் செழித்தோங்கியிருந்த பழங்காலத்தில் நம் நாடும் அத்தகைய நிலையில் இருந்தது. தற்போது மீண்டும் அந்த நிலையை நோக்கி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்வித் துறையில் பெரிய சீர்த்திருத்தங்கள் நடந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக, ஒவ்வொரு வாரமும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. 10 ஆண்டுக்கு முன் 13 ஆக இருந்த ஐஐடிகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐஐஎம்களின் எண்ணிக்கை 21 ஆகவும், எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 22 ஆகவும், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகவும் அதிகரித்துள்ளது. நாட்டின் எதிர்கால சந்ததியினர் உலகை வழிநடத்துவார்கள். அறிவு மற்றும் கல்விக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

* சிக்கிள் செல் நோய் ஒழிக்க நடவடிக்கை
குழந்தைகளை தாக்கும் சிக்கிள் செல் ரத்த சோகை நோய் விழிப்புணர்வு தினம் ஜூன் 19ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘உலக சிக்கிள் செல் தினத்தில், இந்த நோயை ஒழிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். கடந்த ஆண்டு, தேசிய சிக்கிள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தை தொடங்கினோம். மேலும் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு, விரிவுபடுத்தப்பட்ட பரிசோதனை, முன்கூட்டியே நோய் கண்டறிதல் மற்றும் சரியான பராமரிப்பு போன்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்’’ என கூறி உள்ளார். 2047ம் ஆண்டுக்குள் இந்நோயை இந்தியாவை முற்றிலும் ஒழிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.1749 கோடியில் கட்டப்பட்ட நாளந்தா பல்கலை. வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: உலகின் அறிவு மையமாக இந்தியா மாறும் என பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: