இந்திய மதிப்பில் ரூ.1,750 கோடிக்கு விற்பனையாகியுள்ள சொகுசு வீடு: கடற்கரை ஒட்டி 9.5 ஏக்கர் பரப்பளவில் 15,000 ச.அடியில் பிரம்மாண்டம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்யில் கடற்கரையை ஒட்டிய மலிபு நகரில் அமைந்துள்ள பிரமாண்ட சொகுசு வீடு இந்திய மதிப்பில் சுமார் 1750 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு மேற்கே சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கடற்கரை நகரம் மலிபு. உலக பெரும்பணக்காரர்கள் ஹாலிவுட் நட்சத்திரங்கள் தங்கும் விடுதிகள் அடங்கிய மலிபுவில் உலகின் மிக விலை உயர்ந்த வீடுகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள பிரமாண்ட சொகுசு வீடும் அமைந்துள்ளது.

விலை உயர்ந்த சன் கிளாசஸ் உற்பத்தி செய்யும் ஓக்லே நிறுவனத்தை நிறுவிய ஜேம்ஸ் ஜனார்ட் என்பவருக்கு சொந்தமான இந்த ஆடம்பர சொகுசு வீடு கடந்த 2012ம் ஆண்டு 75 மில்லியன் டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.625 கோடிக்கு வாங்கியது கலிபோர்னியா ரியல் எஸ்டேட் வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. கடற்கரையை ஒட்டி 300 அடி மணற்பரப்போடு 9.5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 15,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள அழகிய வீட்டில் 14 படுக்கை அறைகள் உள்ளன. பிரமாண்ட வரவேற்பரையும், இரு கெஸ்ட் ஹவுஸ்களும் கொண்ட இந்த வீட்டை டெலவேர் நகரில் உள்ள நிறுவனத்தை சேர்ந்தவர் 210 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1,750 கொடியே 38 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருப்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

The post இந்திய மதிப்பில் ரூ.1,750 கோடிக்கு விற்பனையாகியுள்ள சொகுசு வீடு: கடற்கரை ஒட்டி 9.5 ஏக்கர் பரப்பளவில் 15,000 ச.அடியில் பிரம்மாண்டம் appeared first on Dinakaran.

Related Stories: