கலைஞர் எழுதிய ராமானுஜர் தொலைக்காட்சி தொடர் நூல் வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: கலைஞர் உருவாக்கிய “ராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடர் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்து சமய அறநிலையத் துறை தன் ஆளுகைக்குட்பட்ட கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை சீரிய முறையில் செய்து வருகிறது.

மேலும், அரிய பக்தி நூல்களை மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்திடும் வகையில் புதிதாக பதிப்பகப் பிரிவு தொடங்கப்பட்டு, இரண்டு கட்டங்களாக 216 அரிய பக்தி நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், ராமானுஜரின் வரலாற்றையும், இந்து மதத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துக் கூறும் விதமாக கலைஞர் “ ராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடரை எழுதினார்.

இத்தொடர் தொலைக்காட்சியில் 433 அத்தியாயங்களாக ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. வைணவ சமய முன்னோடியாக திகழ்ந்த ராமானுஜர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் 1017ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி, மேலக்கோட்டை, திருநாராயணபுரம் போன்ற திவ்ய தேசங்களில் வாழ்ந்து ஆன்மிகப் பணிகளையும், சமய சீர்திருத்தங்களையும் செய்திட்ட சமய முன்னோடியாவார்.

மேலும், வைணவத்தை வளர்க்க விசிஷ்டாத்வைதம் என்ற கோட்பாட்டையும், கோயில் வழிபாட்டுக் கோட்பாடுகளையும் உருவாக்கியதோடு அன்றாட பூஜை நடைமுறைகள் குறித்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வகுத்தளித்து சிறப்பு சேர்த்துள்ளார். தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பான ராமானுஜரின் வரலாற்றை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவு “ராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்” எனும் தலைப்பில் நூலாக்கம் செய்துள்ளது.

இந்நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலத்தில் நேற்று வெளியிட்டார். இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகி. சிவம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர் மடம், ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ரெங்கராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஎம்பார் ஜீயர் மடம்,

அப்பன் உலகாரிய ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஜீயர் மடம், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், “ராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்” தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் குட்டி பத்மினி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* ‘சமயங்கள் ஒற்றுமையை வளர்க்க வழிகாட்டட்டும்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: அடித்தட்டு மக்களுக்கு மாண்பு பெயர்கள் சூட்டி சுயமரியாதையை காத்த ராமானுஜரின் காவியத்தை ‘மதத்தில் புரட்சி செய்த மகான்’ என தனது நிறைவுக்கால படைப்பாக வழங்கினார் கலைஞர்.

சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை அரவணைத்து கோயில் நுழைவு செய்து – கோயிலினுள் தமிழ் மந்திரங்களை ஓங்கி ஒலிக்கச் செய்த ராமானுஜரின் வாழ்வுதன்னை, கலைஞரின் எழுத்துகளில் உங்கள் கைகளுக்கு புத்தகமாக வழங்குகிறோம். சமயங்களும் சமய நெறிகளும் மானுடத்தை மேம்படுத்த, ஒற்றுமையை வளர்க்க, ஏற்றத்தாழ்வுகளை நீக்க வழிகாட்டட்டும். பொலிக, பொலிக.

The post கலைஞர் எழுதிய ராமானுஜர் தொலைக்காட்சி தொடர் நூல் வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: