கொந்தகை, வெம்பக்கோட்டை உட்பட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல்நகரம் மற்றும் மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, தொல்லியல் துறை சார்பில் 2024ம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் – கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான கொந்தகை, விருதுநகர் மாவட்டம்- வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் – பொற்பனைக்கோட்டை, தென்காசி மாவட்டம் – திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் – சென்னானூர், திருப்பூர் மாவட்டம் – கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டம் – மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.

பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற நெல் உமியினை பகுப்பாய்வு செய்ததன் வாயிலாக உறுதி செய்ய முடிகிறது. அதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழாய்வில் பெறப்பட்ட இரண்டு அக்செலரேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி காலக் கணிப்பு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் இரும்பு 4200 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டது உறுதி செய்ய முடிகிறது.

அண்மைக்கால தொல்லியல் சாதனைகள் மூலம் நமது புகழ்பெற்ற, நீண்ட வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் கால வரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, தொழில்நுட்பம் மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தற்போது 2024ம் ஆண்டில் கீழ்க்காணும் எட்டு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்ற ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ததைப் போன்று இவ்வாண்டிலும் எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது சிறப்பாகும்.

1. கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, சிவகங்கை மாவட்டம் – பத்தாம் கட்டம்.

2. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – மூன்றாம் கட்டம்.

3 கீழ்நமண்டி, திருவண்ணாமலை மாவட்டம் – இரண்டாம் கட்டம்.

4. பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் – இரண்டாம் கட்டம்.

5. திருமலாபுரம், தென்காசி மாவட்டம் – முதல் கட்டம்.

6. சென்னானூர், கிருஷ்ணகிரி மாவட்டம் – முதல் கட்டம்.

7. கொங்கல்நகரம், திருப்பூர் மாவட்டம் – முதல் கட்டம்.

8. மருங்கூர், கடலூர் மாவட்டம் – முதல் கட்டம்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2022-2023 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், பெரும்பாலை என்னும் தளங்களில் மேற்கொண்ட அகழாய்வின் அறிக்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 138 கல்வெட்டுகளில் விளக்க உரைகள் அடங்கிய தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி – XXVIII ஆகிய இரண்டு நூல்களை முதல்வர் நேற்று வெளியிட்டார்.

The post கொந்தகை, வெம்பக்கோட்டை உட்பட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: