மஞ்சாலுமூடு டாஸ்மாக் கடையில் சிறுமிக்கு மது வாங்கி கொடுத்த தாய்

*காப்பகத்தில் சேர்த்த அதிகாரிகள்

அருமனை : மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் கடை வாசலில் யாசகம் செய்த சிறுமிக்கு, தாய் மது ஊற்றிக்கொடுத்த தகவல் அறிந்ததும், அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.குமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியில் 2 நாளாக 9 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் இரவு நேரத்தில் கடை வராண்டா பகுதியில் தூங்குவதை பொதுமக்கள் கவனித்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சிறுமிக்கு டாஸ்மாக்கடை அருகில் வைத்து ஒரு பெண் மது ஊற்றிக் கொடுப்பதை சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர்கள் சிறுமி குறித்து விசாரித்தனர். அப்போது டாஸ்மாக் கடை உள்ள பகுதியில் சிறுமி யாசகம் வாங்கி சாப்பிட்டு வருவது தெரியவந்தது. இது குறித்து விசாரித்து கொண்டு இருக்கும் போது சிறுமி திடீரென தாளக்குளம் அருகில் இருக்கும் தோப்புக்கு சென்று விட்டார்.

அங்கு சென்று பார்த்த போது சிறுமியின் பெற்றோர் போதையில் இருந்தனர். அவர்கள் விசாரித்தபோது சிறுமி யாசகம் வாங்கி கொண்டு வரும் பணத்தில் பெற்றோர் மது அருந்துவது தெரியவந்தது. சிறுமிக்கு மது ஊற்றிக்கொடுத்தது தாய் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பெண் சமூக ஆர்வலர்கள் அருமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தமிழ்நாடு குழந்தைகள் உதவி மையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுமி தக்கலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4வது வகுப்பு படித்து வருவதாக கூறியுள்ளார். பள்ளிக்கூடம் திறந்தும் ஏன் செல்லவில்லை என்று போலீசார் கேட்டனர். உடனே ஒருமுறை தக்கலை, இன்னொரு முறை கோணம் என்று பள்ளியின் பெயரை மாற்றி மாற்றி கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இரவு நேரம் நெருங்கியதால் சிறுமி மஞ்சாலுமூடு ஊராட்சி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து அண்டு கோடு விஏஓ பிரதீபா, சிறுமி அவரது பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் அங்கு வந்த நாகர்கோவில் குழந்தைகள் உதவி மைய களப் பணியாளர் மேகலா குழந்தையிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து இரவு சுமார் 9 மணியளவில் சிறுமி காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக மஞ்சாலுமூடு ஊராட்சி பணியாளர்கள் குழந்தைக்கு புதிய ஆடை வழங்கியும், தலைவாரி அழகுபடுத்தியும் அனுப்பி வைத்தனர்.

The post மஞ்சாலுமூடு டாஸ்மாக் கடையில் சிறுமிக்கு மது வாங்கி கொடுத்த தாய் appeared first on Dinakaran.

Related Stories: