திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ₹80 கோடி மதிப்புள்ள 18 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருப்போரூர், ஜூன் 14: திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ₹80 கோடி மதிப்புள்ள 18 ஏக்கர் அரசு நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 700 ஏக்கர் நிலங்கள் திருப்போரூர், தண்டலம், கருநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளது. பெரும்பாலான நிலங்கள் இப்பகுதி மக்களுக்கு குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கோயில் நிலங்களை மீட்டு கோயில் வசம் சுவாதீனப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆண்டு குத்தகை செலுத்தும் நிலங்களை தவிர்த்து கோயில் கணக்கில் வராத நிலங்களை மீட்டெடுத்து சுவாதீனப்படுத்த வேண்டும், என்று உத்தரவிட்டது. இதனடிப்படையில் பல்வேறு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புல எண் 225ல் அடங்கிய 5 ஏக்கர் 1 சென்ட் நிலம் தனி நபர் ஆக்கிரமிப்பிலும், புல எண் 161/7-ல் அடங்கிய 13 ஏக்கர் 44 சென்ட் நிலம் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பாரதிய வித்யா பவன் ஆக்கிரமிப்பிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல்முருகன் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி நிலங்களை மீட்டெடுத்தனர். மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ₹80 கோடிக்கு மேல் இருக்கும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் பிரபல ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பான பாரதிய வித்யா பவன் நிறுவனம் திருப்போரூரில் ஆதிசங்கரர் பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்குவதற்காக 64 ஏக்கர் நிலங்களை கிரையம் வாங்கி இருப்பதும், இந்த நிலங்களுக்கு செல்ல வழி இல்லாததால் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 13 ஏக்கர் 44 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து மதில்சுவர் அமைத்து இருப்பதும் அந்த நிலங்கள்தான் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த வாரத்தில் மேலும் 20 ஏக்கர் நிலங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்ற உள்ளதாகவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ₹80 கோடி மதிப்புள்ள 18 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: