மாமல்லபுரம் கடலில் 5 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு நிரந்தர தடுப்பு வேலி அமைக்க வேண்டும்: உள்ளூர் மக்கள், மீனவர்கள் கோரிக்கை

மாமல்லபுரம், ஜூன் 12: மாமல்லபுரம் கடற்கரை கோயில் வலது புறத்தில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கடலில் குளித்து வருகின்றனர். இதனை, தடுக்க நிரந்தர தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்களும், மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாமல்லபுரத்துக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீர தலசயன பெருமாள் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காகவும், அங்குள்ள கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், போட்டோ ஷூட் எடுக்கவும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கடற்கரையில் கால் நனைக்கவும், வறுத்த மீன்களை ருசி பார்க்கவும், கற்சிலைகளை வாங்கி அலமாரியில் வைத்து அழகுபடுத்துவதற்காக பலர் வருகின்றனர்.

மேலும், பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நின்று காட்சி தரும் பல்லவ மன்னர்கள் கைவண்ணத்தில் செதுக்கிய புராதன சின்னங்கள், பழைய மற்றும் புதிய கலங்கரை விளக்கம், மியூசியம் ஆகியவற்றை கண்டு ரசிக்கவும், கோவளம் புளூ பீச், வடநெம்மேலி பாம்பு பண்ணை, முதலை பண்ணையை சுற்றிப் பார்க்கவும், கடம்பாடி மாரி சின்னம்மன் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

அதேபோல், ஆங்கில புத்தாண்டு, காணும் பொங்கல், குடியரசு தினம், தமிழ் புத்தாண்டு, சுதந்திர தினம், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருகின்றனர். அவ்வாறு, வருபவர்கள் உற்சாகமாக கடலில் குளித்து மகிழ்வது வழக்கமாக கொண்டுள்ளனர். மாமல்லபுரம் கடலில் குளிக்க அனுமதி உள்ளதா, இல்லையா என தெரியவில்லை. இங்கு, கடற்கரை பகுதியில் நீரோட்டத்திற்கு தகுந்தாற்போல் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு கடல் சீற்றம் காணப்படுவது வழக்கம்.

கடலுக்கு அடியில், மணல் பகுதியில் புதையும் தன்மையும் இருக்கும். ஆபத்தான, இப்பகுதியில் பயணிகள் நீராடுவதற்கென கடற்கரையில் தனியாக ஒரு பகுதி என்று எந்த துறை மூலமும் ஒதுக்கவில்லை.
மாமல்லபுரம் கடலில் பல இடங்களில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் மீனவர்களை தவிர வேறு யாரும் கடலில் இறங்க மாட்டார்கள். கடலில் குளிக்கும் போது நீரோட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் பலர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்களில், அதிகமானோர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அப்படி, இருந்தும் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கக் கூடாது என எந்த தடையும் இதுவரை விதிக்கப்படவில்லை. இதனால், தடையை மீறி பலத்த காற்று வீசும் காலங்களிலும், கடல் கொந்தளிப்பாக உள்ள நிலையிலும் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலர் கடலில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர். இவ்வாறு, மகிழ்ச்சியாக கடலில் குளிக்கும் போது, சோகமான நிகழ்வுகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடலில், குளிப்பவர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் தொடர் கதையாக உள்ளது.

கடலின், ஆபத்தை உணராமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க கடலோர காவல் படை போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை பலகைகளை வைக்க தவறியதால், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு கடற்கரையோரம் பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்ட எச்சரிக்கை பலகை வைத்தனர். ஆனாலும், மாமல்லபுரம் கடலில் சுற்றுலாப் பயணிகள் இறங்கி குளிப்பது, நீச்சல் அடிப்பது, குதித்து விளையாடுவது. ஒருவர் மீது மற்றொருவர் ஏறி தலைகீழாக குதிப்பது. ஆபத்தை உணராமல், கிரிக்கெட் பந்து போல் குழந்தைகளை மேலே தூக்கிப் போட்டு பிடிப்பது உள்ளிட்ட கண் மூடித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இங்கு, கடலோர காவல் படை போலீசார், அருகில் உள்ள மீனவர்கள் ஆகியோர் பாதுகாப்புக்கு இருந்தாலும் கடலில் குளிக்கும் போது அலையில் அடித்து செல்லப்பட்டும், தண்ணீரில் மூழ்கியும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

5 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில், அதிகமாக கல்லூரி மாணவர்களே உயிரிழந்துள்ளனர். கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள 2 கல்லூரிகளில் படிக்கும் 40 மாணவர்கள் ஒன்றிணைந்து, ஒரு பேருந்து மூலம் மாமல்லபுரத்தில் சுற்றுலா வந்தனர். அப்போது, 2 குழுக்களாக பிரிந்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு கடற்கரை கோயிலுக்கு வலது புறத்தில் கடலில் ஜாலியாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ராட்சத அலை 10 பேரை இழுத்துச் சென்றது. அப்போது, அருகில் இருந்த மீனவர்கள் படகு மூலம் நடுக்கடலுக்கு சென்று 4 பேரை உயிருடன் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மற்ற 6 மாணவர்களை மீட்க முடியவில்லை.

மறுநாள் மெரினா பீச்சில் ஆழ்கடலில் மூழ்கி மீட்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு, மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் 2 நாட்கள் தீவிரமாக தேடி 6 பேரை சடலமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த மாதிரியான, சம்பவங்களை தடுக்க வேண்டிய கடலோர காவல் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதும் இல்லை. பகல் நேரங்களில் கடற்கரை பகுதியில் ரோந்து செல்வதும் இல்லை. மாமல்லபுரம் உலக புகழ் பெற்ற கற்றுலாத் தலமாக உள்ளதால், இங்கு ஏராளமான விஐபிகள், விவிஐபிகள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஏராளமானோர் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

அப்படி, வருபவர்கள் சிலர் கடற்கரைக்கு சென்று முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து, கடலில் நீராடுகின்றனர். அப்படி, இருக்கும் சூழ்நிலையில் கடலோர காவல் படை போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாதது பலத்த சந்தேகத்தையும், ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கடலில் குளிக்கும் போது உயிரிழப்பு ஏற்படாதவாறு மாமல்லபுரம் கடற்கரையில் நிரந்தர தடுப்பு வேலி அமைக்கவும், போதுமான கடலோர காவல் படை போலீசார் மற்றும் காவல்துறையினரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்களும், மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கடந்த 7ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் பல்வேறு புராதன சின்னங்களையும், கோயில்களையும் அழகுர செதுக்கினர். இதனால், கோயில் நகரம் என்ற பெருமையும் இவ்வூருக்கு உள்ளது. இந்த, புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் வருகை தருகின்றனர். குறிப்பாக அக்டோபர் முதல் மார்ச் வரை 6 மாதங்கள் சீசன் காலம் என்பதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரை பார்க்க முடியும். அப்படி, வரும் வெளிநாட்டினர் குறும்படம் எடுப்பது, பல்வேறு வரலாற்றுத் தகவல்களை சேகரிப்பது, இங்குள்ள தெரு நாய்களுக்கு சிகிச்சை அளிப்பது. கோடை காலங்களில் இலவச தையல் பயிற்சி கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, சாதாரண நாட்களை விட கோடை காலங்களில் மாமல்லபுரம் கடற்கரைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 4 நான்கு மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.

அப்படி, வரும் பயணிகள் கோடை வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமலும், ஆபத்தை உணராமலும் கடலில் இறங்கி குளிக்கின்றனர். அதில், நீண்ட தூரம் நீந்தி ஆழமான பகுதிக்கு செல்கின்றனர். இதனை பார்க்கும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் அதே ஆழமான பகுதிக்கு செல்கின்றனர். அப்போது, நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு ராட்சத அலையில் சிக்கி கடலின் ஆழமான நடுப் பகுதிக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர். அப்படி, இழுத்துச் செல்லப்படுவர்கள் அங்குள்ள பாறை கற்கள் மீது மோதி மண்டை உடைந்தும், கை மற்றும் கால்கள் உடைந்தும் உயிரிழந்து, மேலே மிதந்து வர முடியாமல் பாறை இடுக்குகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ஆழமான பகுதி என எந்த இடத்திலும், கடலோர காவல் படை போலீசார் மூலமோ, மீன்வளத்துறை மூலமோ, சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் சுற்றுலாத்துறை மூலமோ இது ஆழமான பகுதி இங்கு யாரும் குளிக்கக் கூடாது என எச்சரிக்கை பெயர் பலகை வைக்காமல் விட்டதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து மொழியுடன் கூடிய எச்சரிக்கை பெயர் பலகை வைக்கப்பட்டது. இதையும் மீறி, பெரியவர்கள் முதல் சிறுவர்களை சர்வ சாதாரணமாக கடலில் இறங்கி குளிக்கின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை குறைந்தளவு பயணிகளே கடற்கரைக்கு வருகின்றனர். ஆனால், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களில் ஆயிரக்கணக்கான பயணிகளில் கடற்கரையில் குவிகின்றனர்.

இவர்களை, கட்டுப்படுத்தவோ, கடலில் இறங்கி குளிக்க கூடாது என எச்சரித்து திருப்பி அனுப்பவோ அங்கு கடலோர காவல் படை போலீசாரோ அல்லது சட்டம் ஒழுங்கு போலீசாரோ பணியில் இல்லாததே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விடுகிறது. கடந்த, 5 ஆண்டுகளில் மட்டும் 50 க்கும் மேற்பட்டோர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு, ஜனவரி முதல் மே மாதம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, மீன்வளத் துறை கடலோர காவல் படை போலீசார், சட்ட ஒழுங்கு போலீசார், சுற்றுலாத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் ஒன்றிணைந்து அலட்சிய போக்கை கைவிட்டு உயிரிழப்புகளை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.

உயிரிழப்பை தடுக்க…
மாமல்லபுரம் கடலில் குளிக்கும் போது ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்காக தற்போது வலை மூலம் தற்காலிகமாக தடுப்பு வேலியும், விரைவில் 1 கிமீ தூரத்திற்கு நிரந்த தடுப்பு வேலியும் அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

உயர்கோபுரம் அமைத்து கண்காணிப்பு
மாமல்லபுரம் கடற்கரையில் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்கும் வகையில், கடலோர பாதுகாப்பு படை போலீசார் கடற்கரையில் உயர்கோபுரம் அமைத்து கண்காணிக்க போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகள் குளிக்க தடை
மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க வரும் பயணிகள், புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு கடற்கரைக்கு சென்றுகடலில் இறங்கி குளிக்கின்றனர். அப்போது, அவர்கள் ஆபத்தை உணராமல் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து சென்று கடலில் குளிக்க வைக்கின்றனர். எனவே, பாதுகாப்பு கருதி குழந்தைகள் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

மீட்பு உபகரணங்களுடன்…
கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்குபவர்களை உடனடியாக மீட்கும் வகையில், வேளாங்கண்ணியில் இருப்பது போன்று மாமல்லபுரத்துக்கும் 6 பேர் கொண்ட மீனவ குழுவினரை நியமித்து சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். அவர்களுக்கு, தேவையான ரப்பர் படகு, லைப் ஜாக்கெட் மற்றும் மீட்பு உபகரணங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எச்சரிக்கை பலகை
மாமல்லபுரம் கடற்கரைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமானோர் வருகின்றனர். அப்படி, வருபவர்கள் கடற்கரையில் பொழுதை கழிக்கின்றனர். அதில், சிலர் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். அந்த நேரங்களில், அலையில் அடித்துச் செல்கின்றனர். இதனை, தடுக்க ஆழமான பகுதி உள்ளது. இங்கு, யாரும் குளிக்கக் கூடாது என பயணிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து மொழிகளிலும் அச்சிடப்பட்ட எச்சரிக்கை பெயர் பலகை வைக்க வேண்டும்.

The post மாமல்லபுரம் கடலில் 5 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு நிரந்தர தடுப்பு வேலி அமைக்க வேண்டும்: உள்ளூர் மக்கள், மீனவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: