அரசியல் கட்சிகளின் சொத்து பட்டியலில் பாஜகவின் வங்கி கணக்கில் ரூ.6,900 கோடி இருப்பு: காங்கிரசிடம் வெறும் ரூ.53 கோடி எனத் தகவல்

 

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த கணக்கு விவரங்களில், பாஜகவிடம் ஆறாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியிடம் மிகக் குறைந்த தொகையே இருப்பது தெரியவந்துள்ளது.டெல்லியில் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களது வரவு செலவு மற்றும் வங்கி இருப்பு விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன.

இதில் மத்தியில் ஆளும் பாஜகவின் வங்கி கணக்கில் தற்போது ரூ.6,900 கோடிக்கும் அதிகமான தொகை இருப்பில் உள்ளது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. அதேவேளையில், நாட்டின் பழமையான கட்சியான காங்கிரசின் தலைமை அலுவலகம் மற்றும் மாநில, மாவட்ட கிளைகள் என அனைத்தும் சேர்த்து அக்கட்சியின் வங்கி கணக்கில் வெறும் ரூ.53 கோடி மட்டுமே இருப்பு உள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற கட்சிகளைப் பொறுத்தவரைத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றியைப் பெறாவிட்டாலும் பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.580 கோடி இருப்பு உள்ளது. ஆம் ஆத்மி கட்சியிடம் ரூ.9.9 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ரூ.4 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் ரூ.41 லட்சமும் மட்டுமே உள்ளன. இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த அறிக்கையில், ‘2024-25ம் நிதியாண்டில் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் நன்கொடையாக ரூ.517 கோடி வசூலானது’ என்று குறிப்பிட்டிருந்தது.

ரூ.20 ஆயிரத்திற்குக் குறைவான நன்கொடைகளை கணக்கில் காட்டத் தேவையில்லை என்ற விதி இருப்பதால் அந்த விவரங்கள் இதில் இடம்பெறவில்லை. மேலும், பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கணக்கு விவரங்கள் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Related Stories: