காயத்துக்கு துணியுடன் தையல் போட்ட டாக்டர்: ஈரோடு தனியார் மருத்துவமனை மீது புகார்

ஈரோடு: ஈரோட்டில் விபத்தில் காயம் அடைந்த நபருக்கு, காயத்தில் துணியுடன் சேர்த்து தையல் போட்ட தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பூபதி (38). கார் டிரைவர். இவர், கடந்த 1ம் தேதி ஈரோடு ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் அருகே பைக்கில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் பூபதியை மீட்டு ஈரோடு இடையன்காட்டு வலசில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, பூபதிக்கு நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கு, சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.6 ஆயிரம் வரை தனியார் மருத்துவமனைக்கு செலுத்தியுள்ளனர். பின்னர், 3ம் தேதி பூபதியிடம் மருத்துவமனை நிர்வாகம், மேல் சிகிச்சை அளிக்க கூடுதல் பணம் செலவாகும் என கூறியதால் பூபதி அங்கிருந்து வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து, பூபதிக்கு கடும் வலி ஏற்பட்டதால், ஈரோடு அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சைக்கு வந்தார். அப்போது, பூபதிக்கு ஏற்பட்ட காயத்தை அரசு மருத்துவர் பரிசோதித்தார். அப்போது, அந்த காயம் பட்ட இடத்தில் துணியுடன் சேர்த்து தையல் போடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து, பூபதி சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் அம்பிகாவும் பூபதியிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக பூபதி அனுமதிக்கப்பட்டு, நெற்றியில் காயத்தில் துணியுடன் போடப்பட்ட தையலை அகற்றி, துணியை எடுத்தனர்.

இதுகுறித்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பூபதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் விபத்தின்போது ஏற்பட்ட காயத்தினால் சுய நினைவு இன்றி இருந்தேன். அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள்தான் இடையன்காட்டு வலசில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு எனக்கு நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடும்போது, துணியை கூட அகற்றாமல் அப்படியே தையல் போட்டு விட்டனர். இது எனக்கு ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர் கூறித்தான் தெரியவந்தது. காயத்தில் இருந்த துணியை, ஏற்கனவே போடப்பட்ட தையலை பிரித்துதான் அகற்றினர். தொடர்ந்து, அறுவை சிகிச்சை செய்து உள்ளே உள்ள துணியை அகற்ற வேண்டும் என அரசு மருத்துவர் கூறியதால் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளேன். எனவே, எனக்கு அலட்சியமாக சிகிச்சை செய்து துணியுடன் தையல் போட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து, அந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பூபதி கூறினார்.

The post காயத்துக்கு துணியுடன் தையல் போட்ட டாக்டர்: ஈரோடு தனியார் மருத்துவமனை மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: