உங்க டிஎன்ஏவிலேயே அது இல்லையே மோகன் பகவத் சொன்ன பிறகாவது கேளுங்களேன்: மோடியிடம் கபில் சிபல் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘தேர்தல் கொண்டாட்டம் முடிந்து விட்டது. இனி மணிப்பூருக்கு முன்னுரிமை தாருங்கள். அங்கு அமைதியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுங்கள்’ என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் வலியுறுத்தினார். இதை குறிப்பிட்டு மாநிலங்களவை மூத்த எம்பி கபில் சிபல் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் விவகாரத்தை பற்றி பல மாதங்களாக நான் வலியுறுத்தி வருகிறேன். ‘நமக்கும் அவர்களுக்கும் எதிரான சூழல் உருவாகிறது’ என அரசை எச்சரித்தேன். எதிர்க்கட்சிகள் சொல்வதற்கு அரசு செவி சாய்த்தால் தான் நாட்டை முன்னோக்கி வழிநடத்தி செல்ல முடியும். ஆனால் நாங்கள் சொல்வதை கேட்கும் பழக்கம் பிரதமர் மோடியின் டிஎன்ஏவிலேயே கிடையாது. இப்போது, மணிப்பூர் பற்றி மோகன் பகவத்தே கூறியிருக்கிறார். அதையாவது பிரதமர் மோடி கேட்க வேண்டும்.

மணிப்பூருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அங்குள்ள முதல்வர் பைரன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தேன். ஆனால் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரையே நீக்க முடியாத நீங்கள், முதல்வரை என்ன செய்வீர்கள்? காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கினீர்கள், ஆனால் இப்போதும் காஷ்மீரில் எதுவும் மாறவில்லை. இப்போது பஸ் மீது கொடிய தாக்குதல் நடந்துள்ளது. இப்போதுகூட அங்கு உமர் அப்துல்லாவை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது யார்? எனவே கடந்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்களோ அதை மீண்டும் புதிய தேஜ கூட்டணி அரசில் செய்து விடாதீர்கள். பாஜவுக்கு ஆட்சி நடத்தும் எண்ணமில்லை, அதிகார ஆசை மட்டுமே உள்ளது. இவ்வாறு கூறி உள்ளார்.

The post உங்க டிஎன்ஏவிலேயே அது இல்லையே மோகன் பகவத் சொன்ன பிறகாவது கேளுங்களேன்: மோடியிடம் கபில் சிபல் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: