திருவள்ளூர் அடுத்த நுங்கம்பாக்கம் ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம் கீழ் 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர், ஜூன் 11: , கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், நுங்கம்பாக்கம் ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணியினை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் பாலகிருஷ்ணன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆய்ஷ குப்தா, ஆவின் பொது மேலாளர் ராஜேஷ், வட்டாட்சியர் செ.வாசுதேவன், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர்கள் பாஸ்கர், தாமோதரன், சுமதி, மெய் ஞானசுந்தரம், சுபஸ்ரீ, ஊராட்சி தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜூன் 10 முதல் ஜூலை 1ம் தேதி வரை 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நமது மாவட்டத்தில் 2,79,200 பசுவினம் மற்றும் எருமையினம் சார்ந்த கால்நடைகள் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்தவையாக கணக்கிடப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடைகளை பாதிக்கும் வைரஸ் நோய்களில் கோமாரி நோய் மிக முக்கியமானது. இந்நோய் பாதித்த கால்நடைகளுக்கு காய்ச்சல் ஏற்படும். தீவனம் உட்கொள்ளாது. வாயில் நுரை கலந்த உமிழ்நீர், நூல் போல ஒழுகிய வண்ணம் இருக்கும். வாயின் உட்பகுதி, நாக்கு மற்றும் கால் குளம்பின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றி பின்பு உடைந்து ரணமாக மாறும். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படலாம். நோய் பாதித்த கால்நடைகளில் ரத்தசோகை மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படும்.

இந்நோயினால் 5 சதவீதம் வரை இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் பாதித்த கால்நடைகளின் கன்றுகளை பால் குடிக்க விடக்கூடாது. அவ்வாறு குடித்தால் கன்றுகளுக்கு உடனடியாக இறப்பு ஏற்படும். பால் உற்பத்தி திறன் மிகவும் பாதிக்கும். இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படும். இந்நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை நான்கு சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போட திட்டமிடப்பட்டது. அதன்படி நமது மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பணிகள் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்புற பகுதிகளிலும் 88 குழுக்கள் மூலம் 21 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

எனவே கால்நடை வளர்ப்போர் இந்த முகாமினை பயன்படுத்தி, தங்கள் கால்நடைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி, கால்நடைகளை நோயிலிருந்து காக்கவும், 4 மாத வயதுக்கு மேற்பட்ட கன்றுகளுக்கு முதல் முறை தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்திய 21 நாட்களுக்கு பின்னர் பூஸ்டர் தடுப்பூசியினையும் தவறாது செலுத்தி கன்றுகளுக்கு முழுமையான நோய் எதிர்ப்புத்திறன் பெற வேண்டும். மேலும் இதுவரை காதுவில்லை பொருத்தப்படாத, விடுபட்ட மற்றும் புதிய கால்நடைகளுக்கு காதுவில்லை பொருத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், மாடு வளர்ப்பவர்கள் உங்கள் மாட்டுப் பாலினை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க முன் வர வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவது மூலம் எளிய மக்களுக்கு மானிய விலையில் உங்கள் பாலை உபயோகிக்கும் பொழுது அதிகமான புரதச்சத்து கிடைக்கும். கூட்டுறவு சங்கங்களுக்கு உங்கள் பாலை வழங்குவதால் முன்னுரிமை அடிப்படையில் உங்களுக்கு மாட்டு கடன் தொகை பெறுவது எளிமையாக்கப்பட்டு கடன் தொகையில் 35% மானியமாக கிடைக்கும். எனவே உங்கள் மாட்டின் பாலினை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க முன் வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். பின்னர் 5 பயனாளிகளுக்கு தீவன விதைகளும், 5 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

The post திருவள்ளூர் அடுத்த நுங்கம்பாக்கம் ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம் கீழ் 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: