அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும் அனைத்து கட்சிகளும் கூட்டணிக்கு வரலாம்: இந்தியா கூட்டணி ஆலோசனைக்கு பின் காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு

புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும் அனைத்து கட்சிகளும் இந்தியா கூட்டணிக்கு வரலாம் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். 18வது மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே சமயம் 293 தொகுதிகள் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்தது. இந்தியா கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. அடுத்து ஆட்சி அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சி செய்து வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் நடந்தது.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி டிஆர் பாலு, ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், கல்பனா சோரன், தேசியவாதகாங்கிரஸ்(எஸ்பி) தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ், ராம்கோபால்யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா உத்தவ் பிரிவு சஞ்சய் ராவத், அரவிந்த் சவாந்த், உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, ஆம்ஆத்மி எம்பிக்கள் சஞ்சய்சிங், ராகவ் சதா, ஆர்எஸ்பி தலைவர் பிரேமசந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் அடுத்து என்ன செய்யலாம், தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ், சந்திரபாபுநாயுடு உதவியுடன் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் உள்ளதால் அவர்களை அணுகுவதா என்றெல்லாம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில்,’அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள மதிப்புகளுக்கு அடிப்படை அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்ளும் அனைத்துக் கட்சிகளையும் இந்தியா கூட்டணி வரவேற்கும். இந்த தேர்தலில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் நன்றாகவும், ஒற்றுமையாகவும், உறுதியாகவும் போராடின. இந்த தேர்தல் முடிவுகள் மோடிக்கு எதிராகவும், அவரது அரசுக்கு எதிராகவும், அவரது அரசியலின் பொருள் மற்றும் பாணிக்கு எதிராகவும் தீர்க்கமாக உள்ளது. இது ஒரு தெளிவான தார்மீக தோல்வி. மேலும் தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு பெரிய அரசியல் இழப்பு. இருப்பினும், அவர் தனது விருப்பத்திற்காக மக்கள் விருப்பத்தை தகர்க்க உறுதியாக இருக்கிறார். இருப்பினும் நமது அரசியலமைப்பை மதிக்கும் அனைத்துக் கட்சிகளையும் இந்தியா கூட்டணி வரவேற்கிறது’ என்று தெரிவித்தார்.

The post அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும் அனைத்து கட்சிகளும் கூட்டணிக்கு வரலாம்: இந்தியா கூட்டணி ஆலோசனைக்கு பின் காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: