நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மோடியின் பிம்பத்தை சிதைத்துள்ளது: பொன்குமார் விளாசல்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் மூலம் மோடியின் பிம்பம் சிதைந்து போய்விட்டது. 40 தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதன் மூலம் திராவிட மாடல் ஆட்சிக்கும், அந்த ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழ்நாட்டு மக்கள் ஆதரவையும் தங்களுடைய அங்கீகாரத்தையும் வழங்கி உள்ளனர். இந்த மகத்தான வெற்றிக்கு களம் அமைத்து, பிரசாரம் மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய மக்கள் மோடியின் ஆணவத்திற்கும் பாரதிய ஜனதா கட்சியின் சர்வாதிகாரத்திற்கும் சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர். பிரம்மாண்டமாக உத்திர பிரதேசத்தில் ராமர் கோயிலைக் கட்டி, அந்த கோயிலை எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் இடித்து விடுவார்கள் என்றெல்லாம் வாய் கூசாமல் பொய் பேசியும் உத்தர பிரதேச மக்கள் மோடிக்கும் பிஜேபிக்கும் சரியான பாடம் கற்பித்துள்ளனர். ராமரே மோடியை கைவிட்டு விட்டார். பாரதிய ஜனதாவை விட இந்தியா கூட்டணிக்கு அதிக இடங்களை உத்தரப்பிரதேச மக்கள் வழங்கி உள்ளனர்.

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா போன்ற இந்தி பேசும் மாநிலங்களிலேயே மிகப்பெரிய சரிவை பாரதிய ஜனதா கட்சி சந்தித்துள்ளது. மக்கள் பிரச்னையை கவனத்தில் கொள்ளாமல், மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்துவது, எதிர்க்கட்சிகளின் குரல்களை அவமதிப்பது, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பது, தனிமனித விமர்சனம், மொழி, மத, அரசியல் இப்படி பத்தாண்டு காலம் மக்களை ஏமாற்றிய மோடி இந்த முறை இந்த பசப்பு வார்த்தைகள் மூலம் மக்களை ஏமாற்ற முடியவில்லை.

ஒட்டுமொத்தத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றிய, சர்வாதிகாரத்திற்கு சாவு மணி அடித்த இந்திய மக்கள் பாராட்டுதலுக்குரியவர். தமிழ்நாட்டில் என்றைக்கும் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கத்துக்குட்டி அண்ணாமலை, தன்னை மோடி, அமித்ஷாவாகவே நினைத்து செயல்பட்டு வந்த ஆணவத்திற்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மோடியின் பிம்பத்தை சிதைத்துள்ளது: பொன்குமார் விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: