ராணுவ ஹெலிகாப்டர் எரிந்து விழுந்த இடத்தில் கருகிய நிலையில் துப்பாக்கிகள் மீட்பு: மரங்களை வெட்டி உதிரிபாகங்களை தேடுகின்றனர்

குன்னூர்: குன்னூரில் விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டரின் உதிரி பாகங்களை மீட்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. கருகிய  நிலையில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. நீலகிரி மாவட்டம் குன்னூர், காட்டேரி வனப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடம் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான ஏர் மார்ஷல் மன்வேந்தர்  சிங் தலைமையிலான குழுவினர் நேற்று 3வது நாளாக விசாரணை நடத்தினர். அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், தோட்டா நிரப்பும் பெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. இவைகளை ஆய்வுக்காக ராணுவ அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். விசாரணைக்கு நீலகிரி மாவட்ட எஸ்பி ஆசிஸ் ராவத், கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உதவி புரிந்து வருகின்றனர். நஞ்சப்பன்சத்திரம்  கிராம மக்கள், ராணுவ வீரர்களின் உடல்களை மீட்க பெரும் உதவிபுரிந்த  காரணத்தால், அவர்களை பாராட்டும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இவற்றை,  நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் வழங்கினார். பின்னர், ‘‘ஆபத்து  நேரத்தில் உதவிய கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும்  மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும்’’ என்றார். இதற்கிடையில், விமானப்படையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விபத்து நடந்த  பகுதியில் முகாமிட்டு, வெடித்து சிதறிய ஹெலிகாப்டரின் உதிரி பாகங்களை  சேகரித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். * வீடியோ எடுத்த சுற்றுலா பயணி செல்போன் பறிமுதல்கடந்த 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கும் முன்பாக, மேக மூட்டத்தில் மறையும் கடைசி நிமிட காட்சியை சுற்றுலா பயணி ஜோ பால் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இவர், கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர். நண்பர்களுடன் அப்பகுதிக்கு சுற்றுலா சென்றபோது, இந்த வீடியோவை எதேச்சையாக எடுத்துள்ளார். இதுதான், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கும் முன்பாக எடுக்கப்பட்ட முக்கிய வீடியோ ஆதாரம் ஆகும். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோ, போலீஸ் விசாரணையின் முக்கிய சாட்சியமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வீடியோ அடங்கிய செல்போனை காவல்துறையை சேர்ந்த விசாரணை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். இதை, கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து நடந்த இடம் அருகே மலைவாழ் மக்களின் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உயர்அழுத்த மின் கம்பங்கள் ஏதேனும் இருந்ததா? அவை, ஹெலிகாப்டர் விபத்தின்போது சேதம் அடைந்துள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, தனிப்படை போலீசார், மின்வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதேபோல், சம்பவம் நடந்த அன்று, அப்பகுதியில் வானிலை நிலவரம் எந்த அளவில் இருந்தது என்பது குறித்து தகவல் அளிக்கும்படி, சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கும் தனிப்படை போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்….

The post ராணுவ ஹெலிகாப்டர் எரிந்து விழுந்த இடத்தில் கருகிய நிலையில் துப்பாக்கிகள் மீட்பு: மரங்களை வெட்டி உதிரிபாகங்களை தேடுகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: