சாதித்த அரச குடும்ப வாரிசுகள்

2024 மக்களவைத் தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்ட அரச குடும்ப வாரிசுகள் பலர் சிறப்பாக சாதித்துள்ளனர். அவர்கள் விவரம்:

ஜோதிராதித்ய சிந்தியா: 2020ல் காங்கிரஸ் கட்சியுடனான 18 ஆண்டு கால உறவை முறித்துக்கொண்டு பா.ஜவில் இணைந்த குவாலியரின் முன்னாள் அரச குடும்பத்தின் வாரிசு ஜோதிராதித்ய சிந்தியா, மத்தியபிரதேச மாநிலம் குணா தொகுதியில் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவர் காங்கிரசின் ராவ் யாத்வேந்திர சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டார்.

துஷ்யந்த் சிங்: ராஜஸ்தானின் தோல்பூர் இளவரசர் துஷ்யந்த் சிங் கடந்த காலத்தில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த தேர்தலிலும் பா.ஜ சார்பில் ஜலவர்-பரான் தொகுதியில் 3.70 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று காங்கிரசின் ஊர்மிளா ஜெயினை விட முன்னிலையில் உள்ளார்.

மஹிமா குமாரி மேவார்: மகாராணா பிரதாப்பின் வழித்தோன்றலான விஸ்வராஜ் சிங் மேவாரின் மனைவி மஹிமா குமாரி மேவார் ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியில் பா.ஜ சார்பில் களம் இறங்கினார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் தாமோதர் குர்ஜாரை விட சுமார் 4 லட்சம் வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.

யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார்: கர்நாடக மாநிலத்தில் 2015ம் ஆண்டு வாடியார் வம்சத்தின் 27வது ‘ராஜாவாக’ பதவியேற்றவர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார். 31 வயதான இவர் அமெரிக்காவில் படித்தவர். மைசூர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ வேட்பாளராக களம் இறங்கினார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் எம்.லட்சுமணனை விட யதுவீர் 1.39 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார்.

மாளவிகா தேவி:ஒடிசாவில் பாஜ வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் எம்பி அர்கா கேசரி தியோவின் மனைவியும், காலாஹண்டி தொகுதி பா.ஜ வேட்பாளரும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான மாளவிகா தேவி, பிஜு ஜனதா தளத்தின் (பிஜேடி) லம்போதர் நியாலை எதிர்த்து சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

கிருதி சிங் டெபர்மா: வடகிழக்கு மாநிலங்களில், பிராந்தியக் கட்சியான திப்ரா மோர்ச்சா மற்றும் பாஜ கூட்டணி வேட்பாளரும், திரிபுராவின் பழைய அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான கிருதி சிங் டெபர்மா, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராஜேந்திர ரியாங்கை விட திரிபுரா கிழக்குத் தொகுதியில் 4.86 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உள்ளார்.

விக்ரமாதித்யா சிங்: ராம்பூர் அரச குடும்பத்தின் வாரிசும், இமாச்சலப் பிரதேசத்தில் 6 முறை முதல்வராக இருந்த மறைந்த வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்யசிங், பா.ஜ வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத்திடம் 74,755 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ராஜமாதா அம்ரிதா ராய்: ராஜமாதா அம்ரிதா ராய் மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியில் பா.ஜ வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவர் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ராவிடம் 57,000 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.

The post சாதித்த அரச குடும்ப வாரிசுகள் appeared first on Dinakaran.

Related Stories: