8வது தோல்வியை சந்தித்த பொன்னார்

நாகர்கோவில்: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி, 2004 பொதுத்தேர்தல் வரை நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தது. மறுசீரமைப்புக்குப் பின் கன்னியாகுமரி தொகுதியாக பெயர் மாற்றப்பட்டது. இந்த தொகுதியில் பா.ஜ வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் 1991 தேர்தல் தொடங்கி தற்போது நடைபெற்ற 2024 தேர்தல் வரை 10 முறை போட்டியிட்டார். 1991ல் நடைபெற்ற தேர்தலில் 3வது இடத்தையும், 1996, 1998 தேர்தல்களில் 2ம் இடத்தையும் பெற்றார். 1999ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றதுடன் ஒன்றிய அமைச்சரவையிலும் இடம் பெற்றார். 2014ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 7வது முறையாக போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வேட்பாளரான எச்.வசந்தகுமாரை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் 2வது முறை ஒன்றிய அமைச்சராக பொறுப்பேற்றார்.

2019ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 8வது முறையாக காங்கிரஸ் வேட்பாளரான எச்.வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார். எச்.வசந்தகுமாரின் திடீர் மறைவு காரணமாக 2021ல் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 9வது முறையாக களம் கண்ட பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளரான மறைந்த எச்.வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்திடம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 374 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார். தற்போது 10வது முறையாக பா.ஜ சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

The post 8வது தோல்வியை சந்தித்த பொன்னார் appeared first on Dinakaran.

Related Stories: