தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது: தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம்

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 41 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், வேளச்சேரி, மயிலாப்பூர் சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளும் தனித்தனியே அறைகளில் வைத்து எண்ணப்பட்டன.

இதில் சோழிங்கநல்லூர் தொகுதிக்கான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில் முதல் சுற்றிலேயே வாக்கு எண்ணும் இயந்திரம் ஒன்று பழுதானது. அதனால் முதல் சுற்று எண்ணிக்கை வெளியிடுவதில் காலதாமதம் ஆனது. மேலும் இதே சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. மேலும் தி.நகர் தொகுதிக்கான ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் வாக்கு எண்ணிக்கையில் வேறுபாடு காணப்பட்டது. இவ்வாறு மொத்தம் 5 வாக்கு பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

இதுகுறித்து தென்சென்னை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அமித் கூறியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதியில் பழுதான 4 வாக்குப்பதிவு எந்திரங்களில் 2 இயந்திரங்கள் சரி செய்யும் நிலையில் உள்ளது. எஞ்சிய 2 இயந்திரங்கள் சரி செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இதேபோன்று தி.நகரில் ஒரு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை வேறுபட்டுள்ளது. ஒருவேளை 3 வாக்குப்பதிவு இந்திரங்கள் பழுது சரி செய்ய முடியாமல் போனால் கூட ஒரு வாக்கு பதிவு இயந்திரத்திற்கு தலா 1500 வாக்குகள் வீதம் 4500 வாக்குகள் பதிவாகி இருக்கும். ஆனால் முன்னிலையில் இருக்கும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசமானது 5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் இந்த வாக்கு இயந்திரங்கள் பழுது குறித்து எந்த பிரச்னையும் இல்லை. 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் உள்ளதை வைத்து முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். தேவைப்பட்டால் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டை எண்ணுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது: தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: