மேற்கு வங்கத்தில் கெத்து காட்டிய மம்தா

பாஜவை கடுமையாக எதிர்த்து வரும் மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். எனினும் மக்களவை தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் இந்தியா கூட்டணி அமையவில்லை. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் சிபிஎம் உள்ளிட்ட இதர கட்சிகள் ஒன்றிணைந்து தொகுதி பங்கீடு செய்து களமிறங்கின.

2019ம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் 22 இடங்களிலும் பாஜ 18 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது. இந்த தேர்தலில் 29 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜவால் 12 தொகுதிகளை மட்டுமே பெற முடிநதது. காங்கிரஸ் ஒரு இடம் கிடைத்தது.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம.பி மஹூவா மொய்த்ரா பிரதமர் மோடி மற்றும் பாஜவை கடுமையாக விமர்சித்து வந்தார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இருந்து இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனினும் கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளராக போட்டியிட திரிணாமுல் இவருக்கு வாய்ப்பு வழங்கியது. தற்போது இவர் 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மீண்டும் மக்களவைக்கு செல்கிறார்.

ஆதிர் ரஞ்சனை விக்கெட்டை வீழ்த்திய பதான்
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்ரி பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானை எதிர்கொண்டார். அதிர்ரஞ்சன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 85 வாக்குகள் பின் தங்கி தோல்வி அடைந்தார்.

* சந்தேஷ்காலியில் பாஜ காலி
மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியை திரிணாமுல் தலைவர் ஷாஜகான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாக புகார் எழுந்தது. ரேசன் பொருட்களை அபகரிப்பது, நிலங்களை மிரட்டி பறிப்பது என இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்தது. இவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களும் எழுந்தது. இதனால் இங்கு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்முறையும் கலவரமும் வெடித்தது. இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. சந்தேஷ்காலியை உள்ளடக்கிய பஷிராத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகின்றது. திரிணாமுல் வேட்பாளர் எஸ்கே நூருல் இஸ்லாம் வெற்றி பெற்றார். சந்தேஷ்காலி பிரச்னையை பூதகாரமாக்கி அரசியல் லாபம் பெற முயன்ற பாஜ 3.33 லட்சம் வாக்குகள் பின் தங்கி தோல்வியடைந்தது.

The post மேற்கு வங்கத்தில் கெத்து காட்டிய மம்தா appeared first on Dinakaran.

Related Stories: