கடந்த தேர்தலைவிட மூன்று மடங்கு அதிகம் நாடு முழுவதும் ரூ.10,000 கோடி பணம், போதைப்பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. அதற்கு முன்பாக, தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்களை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று வெளியிட்டார். டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழாவில், 68 ஆயிரம் கண்காணிப்பு குழுக்கள், 1.5 கோடி வாக்குச்சாவடிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மக்களவை தேர்தலில் 31.2 கோடி பெண்கள் உட்பட 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கை, ஜி7 அமைப்பில் உள்ள நாடுகளின் மொத்த வாக்காளர்களை விட 1.5 மடங்கு அதிகம்.

27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனில் உள்ள வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம். எனவே, இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய தேர்தல் உண்மையிலேயே ஒரு அற்புதம். உலகில் ஈடு இணை இல்லாதது. இந்த தேர்தலை நடத்த சுமார் 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள், 1,692 விமானப் போக்குவரத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த முறைதான் குறைவான மறுதேர்தல்களும் நடத்தப்பட்டுள்ளன. 39 வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுதேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதுவே 2019 மக்களவை தேர்தலில் 540 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரிலும் தேர்தல் சிறப்பாக நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஒட்டுமொத்தமாக 58.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் 51.05 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது 40 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாகும். இதன் மூலம் விரைவில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த நாங்கள் தயாராகி வருகிறோம். இம்முறை ரூ.10,000 கோடிக்கு பணம், இலவசம், போதைப்பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2019ல் ரூ.3,500 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முறை பெரிய அளவில் எந்த வன்முறை சம்பவங்களும் நடக்கவில்லை. மேற்கு வங்க மாநிலத்திலும், தேர்தலுக்கு பிறகு வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* வாக்கு எண்ணிக்கையில் கலெக்டர்கள் தலையீடா?
வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட கலெக்டர்கள் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், ‘‘நீங்கள் ஒரு வதந்தியை பரப்பி, அனைவரையும் சந்தேகத்தின் கீழ் கொண்டு வர முடியாது. எந்த கலெக்டர் தேர்தல் செயல்பாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதை எதிர்க்கட்சிகள் ஆதாரத்துடன் கூறினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். அதை அவர்கள் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பாக எங்களிடம் சொல்ல வேண்டும்’’ என்றார்.

* ஜெய்ராம் ரமேஷுக்கு அவகாசம் தர மறுப்பு
காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘ஏற்கனவே 150 மாவட்ட கலெக்டர்ளை அமித்ஷா அழைத்து பேசியிருக்கிறார். இதுபோன்ற அப்பட்டமான வெட்கக்கேடான மிரட்டலில் பாஜ அரசு செயல்படுகிறது’’ என குற்றம்சாட்டி இருந்தார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் பதிலளிக்கவும் ஆதாரங்களை தரவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் நேற்று அனுப்பிய பதில் கடிதத்தில், தனது தரப்பு பதிலை தெரிவிக்க ஒரு வார காலம் அவகாசம் கேட்டிருந்தார். அதனை மறுத்த தேர்தல் ஆணையம் நேற்று இரவு 7 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

The post கடந்த தேர்தலைவிட மூன்று மடங்கு அதிகம் நாடு முழுவதும் ரூ.10,000 கோடி பணம், போதைப்பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: