காவி உடை அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவி கோலத்தில் பிரதமர் மோடி 2வது நாளாக தியானம்: சூரிய வழிபாடுடன் தொடங்கியவர் இன்று முடிக்கிறார்

நாகர்கோவில்: கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடை அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையுடன் பிரதமர் மோடி நேற்று இரண்டாவது நாளாக தியானம் மேற்கொண்டார். இன்று தியானத்தை நிறைவு செய்து திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபத்தை பார்வையிட்டு, பின்னர் திருவனந்தபுரம் வழியாக டெல்லி புறப்பட்டு செல்கிறார். மக்களவை தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலையில் கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அவர் தனி படகில் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார். அங்கு அன்னை சாரதா தேவி, ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரது உருவப்படங்களை வணங்கினார். சுவாமி விவேகானந்தர் சிலையை வணங்கி மலர் அர்ச்சனை செய்தார். பின்னர் அங்கு தங்கி தியானம் மேற்கொண்டார்.
இரண்டாவது நாளாக நேற்று அதிகாலையில் 4.30 மணிக்கு எழுந்த பிரதமர் மோடி குளித்து காவி வேஷ்டி, சட்டை, துண்டு என்று முற்றிலும் காவி உடை அணிந்து, நெற்றியில் சந்தனத்தால் பட்டையிட்டு நடுவே குங்கும பொட்டு வைத்து கையில் ருத்ராட்ச மாலையுடன் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து அதிகாலை 5 மணியளவில் வெளியே வந்தார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தை மூன்று முறை வலம் வந்தார். அப்போது மந்திரங்களை கூறிய வண்ணம் கையில் இருந்த ருத்ராட்ச மாலையில் உள்ள ருத்ராட்சங்களை வருடியவாறே நடந்து சென்றார். அங்குள்ள கன்னியாகுமரி பகவதி அம்மனின் பாதம் பதித்த  பாத பாறையில் சென்று வணங்கினார். அங்கு சிறிது நேரம் தரையில் அமர்ந்து யோகாசனத்திலும் ஈடுபட்டு, சிறிது நேரம் அங்கேயே மூச்சு பயிற்சியும் மேற்கொண்டார்.

அதன் பின்னர் காலை 5.55 மணிக்கு சூரிய உதயம் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தின் கிழக்கு பகுதியில் கிழக்கு நோக்கி நின்றுகொண்டு பிரதமர் மோடி கெண்டியில் கொண்டு வந்த நீர்தெளித்து சூரிய நமஸ்காரம் செய்தார். அவரது கெண்டியில் இருந்தது கங்கை தீர்த்தம் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் அங்கிருந்தவாறே திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு ரசித்தார். கடல் அழகையும், அலைகள் அடித்துக்கொண்டிருப்பதையும், படகுகள் நிறுத்தப்பட்டிருப்பதையும் ரசித்த மோடி பின்னர் அங்கிருந்து சுவாமி விவேகானந்தர் மண்டபத்திற்கு உள்ளே சென்றார். அங்கு சுவாமி விவேகானந்தர் சிலைக்கு முன்னதாக சிறிய ஒரு மர இருக்கையில் அமர்ந்தவாறு கை கூப்பியும், கைகளை நீட்டி அமர்ந்தும் தியானம் செய்தார். அப்போது கையில் இருந்த ருத்ராட்ச மாலையில் உள்ள ருத்ராட்சங்களை வருடி மந்திரம் கூறினார். பின்னர் சுவாமி விவேகானந்தரின் சிலை அருகே சென்று சிலையில் மலர் அர்ச்சனை செய்து விவேகானந்தரின் சிலை பாதத்தில் தனது சிரம் தாழ்த்தி வணங்கினார். அங்கிருந்து வெளியே வந்த மோடி, தியான மண்டபத்தில் இருளான பகுதியில் படுக்கை விரிப்பு ஒன்றை விரித்து அதன் மீது இருக்கை அமைத்து அதில் வெள்ளை நிற துணியால் பொதிந்து அதன் மீது அமர்ந்து தியானத்தை தொடர்ந்தார். அப்போது மண்டபத்திற்குள் ஊதுபத்தி புகைக்க விடப்பட்டிருந்தது. மண்டபத்தில் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரம் ஒலிக்க விடப்பட்டிருந்தது. கையில் ருத்திராட்ச மாலையை வருடி மந்திரங்களை கூறி மோடி தியானம் செய்தார். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் தனி அறையில் தங்கியுள்ளார். அங்கு அதற்காக கட்டில், சாய்வு நாற்காலி, ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. துறவிபோல் மாறி பிரதமர் தியானம் செய்யும் காட்சிகள் அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்றும் (1ம் தேதி) கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யும் பிரதமர் மாலை 3 மணிக்கு தியானத்தை நிறைவு செய்துவிட்டு கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறார்.

 

The post காவி உடை அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவி கோலத்தில் பிரதமர் மோடி 2வது நாளாக தியானம்: சூரிய வழிபாடுடன் தொடங்கியவர் இன்று முடிக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: