ஒடிசா முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை


புவனேஸ்வர்: ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்ட பேரவை தேர்தலும் நடந்து வருகிறது.ஒடிசாவில் ஆளும் பிஜேடி கட்சிக்கும் பாஜவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்வர் நவீன் பட்னாயக் மற்றும் அவரது நம்பிக்கை உரியவரும் கட்சியின் மூத்த தலைவர் வி.கே.பாண்டியனையும் பாஜ கடுமையாக தாக்கி வருகிறது. இந்நிலையில், ஒடிசா முதல்வரின் சிறப்பு செயலாளர் டி.எஸ்.குட்டே தேர்தல் பணிகளில் குறுக்கீடு செய்ததாக கூறி அவரை தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் சஸ்பெண்ட் செய்தது.

அதே போல் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஐஜி ஆஷிஷ் குமார் சிங்கை நாளைக்குள்(இன்று) புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் விரிவான மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது என வி.கே.பாண்டியன் கூறினார். அவர் நேற்று கூறுகையில்,‘‘ பாஜவின் திட்டத்தின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.

எடுப்பது 60 ஆயிரம் கோடி, கொடுப்பது ரூ.4 ஆயிரம் கோடி
நிருபர்களுக்கு பேட்டியளித்த வி.கே. பாண்டியன்,‘‘ ஒடிசா கனிம வளங்கள் நிறைந்த மாநிலம். நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே மூலம் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடியை பாஜ அரசு எடுத்து கொள்கிறது. அதற்கு பதிலாக ரூ.4000 கோடியை மாநில அரசுக்கு தருகிறது. இந்த பிரச்னை குறித்து கேட்டால் பூரி ஜெகன்னாதர் கோயிலில் பொக்கிஷ அறை மற்றும் முதல்வர் நவீன் பட்னாயக்கை வசை பாடுவது என்பது போன்ற திசை திருப்பும் முயற்சிகளை செய்கின்றனர். நிலக்கரிக்கு வழங்கப்படும் ராயல்டி தொகையை மறுபரிசீலனை செய்வது தொடர்பான கோரிக்கை 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது’’ என்றார்.

The post ஒடிசா முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: