ஞானத்திற்கு அர்த்தமே தெரியாதவர் தியானமா?.. கன்னியாகுமரியில் மோடி பரிகாரம் செய்தால் நல்லது: கபில் சிபல் சரவெடி

சண்டிகர்: ‘ஞானத்திற்கு அர்த்தமே புரியாத ஒருவர், என்ன தியானம் செய்ய முடியும். கன்னியாகுமரியில் பரிகாரம் செய்வதற்காக மோடி செல்வதாக இருந்தால் நல்லது’ என மாநிலங்களவை எம்பி கபில் சிபல் கூறி உள்ளார். மாநிலங்களவை மூத்த எம்பி கபில் சிபல் சண்டிகரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஞானத்தின் அர்த்தம் புரியாதவரால் என்ன தியானம் செய்து விட முடியும். எனவே, கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி பரிகாரம் செய்ய செல்வதாக இருந்தால் நல்லது. அல்லது சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் இருந்து உத்வேகம் பெறப் போகிறார் என்றால் அதுவும் நல்லதுதான்.

தேர்தல் பிரசாரத்தில் பாஜ கட்சி , ஏன் 10 ஆண்டு ஆட்சியின் சாதனைகளைப் பற்றி பேசுவதில்லை? ஏனென்றால் அவர்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை. 10 ஆண்டாக அவர்கள் என்ன செய்தார்கள் என பிரதமர் மோடி கூட பேசவில்லையே. அவர்கள் செய்த சாதனைகள்தான் என்ன? அவர்கள் ஏதாவது சாதித்திருந்தால், அழகிகள் நடனம், தாலியை அறுப்பார்கள், வாக்கு ஜிகாத் என்றெல்லாம் பேசியிருக்க மாட்டார்கள். எப்போதுமே ஆட்சிக்கு வரும் முன்பாக பெரிய பெரிய பேச்சுக்களை மோடி பேசுவார். ‘காங்கிரசுக்கு 60 ஆண்டு தந்தீர்கள், எங்களுக்கு 60 மாதம் கொடுங்கள், புதிய இந்தியாவை தருவேன்’ என்றார் மோடி.

120 மாதங்கள் (10 ஆண்டு) ஆட்சியில் எங்கே புதிய இந்தியாவை கொடுத்திருக்கிறார்? இவ்வாறு பேசிய கபில் சிபல், சண்டிகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மணீஷ் திவாரிக்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.

The post ஞானத்திற்கு அர்த்தமே தெரியாதவர் தியானமா?.. கன்னியாகுமரியில் மோடி பரிகாரம் செய்தால் நல்லது: கபில் சிபல் சரவெடி appeared first on Dinakaran.

Related Stories: