பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோ மூலம் அறிவித்த யூடியூபர் இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்: கருவிலிருக்கும் பாலினத்தை அறிவித்தால் இந்திய சட்டப்படி குற்றமாகும்

சென்னை: வெளிநாட்டில் பரிசோதனை செய்து தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோ மூலம் அறிவித்த யூடியூபர் இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யூடியூபில் உணவுகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்களைப் பதிவிட்டு பிரபலமானவர் இர்பான். இவருக்கு யூடியூப்பில் கிட்டத்தட்ட 39 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். யூடியூப் மூலம் பல லட்சம் சம்பாதிக்கும் இவர், கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இர்பானின் மனைவி ஆலியா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இர்பான் வெளியிட்ட யூடியூப் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது. அதில், துபாய்க்கு மனைவியை அழைத்துச் சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொண்டதோடு அதனை தன் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடவும் செய்துள்ளார். பொதுவாக வெளிநாடுகளில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிந்து கொள்வதற்காக ‘ஜென்டர் ரிவில்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

அந்நிகழ்ச்சியில் குழந்தையின் பாலினம் குறித்து பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படும். அதில் நீல நிறம் வந்தால் ஆண் குழந்தை, பிங்க் நிறம் வந்தால் பெண் குழந்தை என்றும் தெரிந்து கொள்வார்கள். ஆனால் இத்தகைய வழக்கம், இந்தியாவில் நடைமுறையில் இல்லை. மேலும், வயிற்றில் இருக்கும் குழந்தை, பிரசவமாகும் வரை வெளியில் சொல்லக் கூடாது என்பது நடைமுறை. இந்நிலையில் இர்பான் வெளியிட்ட அந்த வீடியோவில், தனக்கு பிறக்கவுள்ள குழந்தையின் பாலினம் குறித்து வீடியோவாக பதிவிட்டு அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வது, அதனை அறிவிப்பது சட்டப்படி குற்றம் என்பதால் இர்பானிடம் விளக்கம் கேட்டு அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. மேலும் இர்பான் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இதனிடையே வீடியோ விவகாரம் பெரியதாகியதால் நேற்று மாலையில் சமூக வலைத்தளத்திலிருந்து இர்பான் அந்த வீடியோவை நீக்கினார்.

* பாலினம் குறித்து முன்கூட்டியே அறிந்தால் என்ன தண்டனை?
கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை நவீன முறையில் ஸ்கேன் செய்து பார்க்கும் வசதி இந்தியாவுக்கு அறிமுகமான புதிதில், கருவிலேயே ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்யும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறின. இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையத் தொடங்கியது.

இதன் காரணமாக இந்தியாவில் பிறப்புக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கேட்பதோ அல்லது கண்டறிந்து அறிவிப்பதோ ஒன்றிய அரசால் (PCPNDT Act – பாலினத் தேர்வு தடைச்சட்டம்) தடை செய்யப்பட்டு, குற்றமாகவும் அறிவிக்கப்பட்டது. இக் குற்றம் புரிபவர்களுக்கு அபராதத்துடன் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

* இர்பானுக்கு எச்சரிக்கை
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: சிசுவின் பாலினம் குறித்து வெளியிடும் செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர் மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இர்பானுக்கு நேற்று பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை சார்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்படத்தினை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட யூடியூப் நிறுவனத்திற்கு, கணிணி குற்றம் பிரிவிற்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருவின் பாலினம் அறிவதும், அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோ மூலம் அறிவித்த யூடியூபர் இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்: கருவிலிருக்கும் பாலினத்தை அறிவித்தால் இந்திய சட்டப்படி குற்றமாகும் appeared first on Dinakaran.

Related Stories: