விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி

 

புதுக்கோட்டை, மே 21: புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதான நீச்சல்குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவில் நீச்சல்போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை நகர டிஎஸ்பி ராகவி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், காஞ்சிபுரம் சிவகங்கை, பெரம்பலூர், தேனி உள்ளிட்ட 20 மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர்கள் பங்கேற்றனர். இந்த நீச்சல் போட்டியில் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரஸ்ட் ஸ்டாக், பட்டர்ஃபிளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நீச்சல் போட்டி நடைபெற்றது.

இதில் மாற்றுத்திறனாளி சிறுவர்கள் கலந்து கொண்டு தண்ணீரில் மீன்களை போல் துள்ளி குதித்து நீச்சல் அடித்து தங்களுடைய வெற்றி இலக்கை எட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டது அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் பார்வையற்றோர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தியது அனைவரிடத்திலும் வியப்பை ஏற்படுத்தியது. மேலும் இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

The post விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: