நான்கு மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்: பணியாளர்கள் கோரிக்கை மனு

ராமநாதபுரம், மே 14: அரசு தற்காலிக நெல் கொள்முதல் பணியாளர்களுக்கு நான்கு மாத சம்பளப் பாக்கியை தரக்கோரி மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு பரவலான பகுதிகளில் நெல் விளைச்சல் வந்ததது. இதனால் ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி,நயினார்கோயில், சத்திரக்குடி, கமுதி,பார்த்திபனூர், முதுகுளத்தூர், கடலாடி, கடுகுசந்தை, சிக்கல், திருஉத்தரகோசமங்கை உள்ளிட்ட 70 இடங்களில் அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.

இதில் 60 பேர் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு போக்குவரத்துபடி உட்பட மாத சம்பளமாக ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காததால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறி ராமநாதபுரம் மண்டல மேலாளரிடம் மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்கள் பணியாற்றினோம். ஆனால் அரசு நிர்ணயித்த சம்பளம் ரூ.10ஆயிரம் மற்றும் போக்குவரத்து பயணப்படி பணத்தை அதிகாரிகள் வழங்கவில்லை. இதுபோன்று மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றிற்கு ரூ.10 நிர்ணயிக்கப்பட்டது.

ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 5ஆயிரம் மூட்டைகள் வந்தது. ஆனால் அவர்களுக்கும் கூலி வழங்கவில்லை. இதனால் பணியாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே நிலுவையிலுள்ள பயணப்படி உட்பட சம்பள பாக்கியை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.  நுகர்பொருள் வாணிபக் கழகம் ராமநாதபுரம் மண்டல துணை மேலாளர், மாவட்டத்தில் திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருக்கும் எடை போடும் மிசின், சாக்கு பைகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் முழுமையாக பெற்றுக்கொண்ட பிறகு, பணியாளர்களுக்கு விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post நான்கு மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்: பணியாளர்கள் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Related Stories: