ஆந்திராவில் வன்னியர் சங்கத்தினர் கண்டனம் சந்திரபாபு நாயுடுவுக்கு வாக்கு சேகரிக்கும் அன்புமணி ராமதாஸ்

*கருப்பு கொடியுடன் எதிர்க்க முயன்றதால் பரபரப்பு

திருமலை : ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு வாக்கு சேகரிக்கும் அன்புமணி ராமதாஸ்க்கு வன்னியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திராவில் 13ம் தேதி சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கவுள்ள நிலையில், குப்பம் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இதற்கு ஆந்திர மாநில வன்னிய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று வாக்கு சேகரித்த அன்புமணி ராமதாஸ்க்கு கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு காட்ட முயன்று, பின்னர் கைவிடப்பட்டதாக வன்னியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து குப்பம் வன்னியர் சங்க செயலாளர் முருகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:குப்பம் தொகுதியில் சந்திரபாபு 30 ஆண்டுகள் பதவியில் உள்ளார். 2 முறை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரமவுலி போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், அவர் இறப்பிற்கு பின் அவரது மகன் பரத்திற்கு இந்த தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள் உள்ள நிலையில், வன்னியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஜெகன் மோகன் பரத்திற்கு வாய்ப்பு வழங்கி உள்ளார்.

இங்குள்ள வன்னியர்கள் பரத்தை வெற்றி பெற செய்ய முடிவு செய்துள்ளோம். ஆனால் பாமக தலைவர் அன்புமணி வன்னியர் குலத்தை சேர்ந்தவருக்கு ஆதரவு தெரிவிக்காமல், நாயுடுவுக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளார். எனவே அன்புமணிக்கு எதிராக கருப்பு கொடி காண்பித்து எதிர்ப்பு தெரிவிக்க இருந்த நிலையில் அமைச்சர் பெத்தி ராமசந்திரா, வேட்பாளர் பரத் ஆகியோர் யாரு வேண்டுமென்றாலும் சந்திரபாபுவுக்கு பிரசாரம் செய்யட்டும் நமது வெற்றி இலக்கை நோக்கி மட்டும் பிரசாரம் செய்யுங்கள்.

தானாக வெற்றி பெறுவோம் என்றனர். எனவே எதிர்ப்பு காண்பிக்கவில்லை. அன்புமணிக்கு சந்திரபாபுவுக்கு வாக்கு சேகரித்தாலும் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் உரிய பாடம் கற்பிக்க தொகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.அன்புமணி ராமதாஸ்க்கு கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்க முயன்றதாக வன்னியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆந்திராவில் வன்னியர் சங்கத்தினர் கண்டனம் சந்திரபாபு நாயுடுவுக்கு வாக்கு சேகரிக்கும் அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Related Stories: