தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரத்தில் பிடிபட்டவர்கள் தெரிந்தவர்கள்தான்… ஆனா, பணம் எனக்கு சொந்தமானது அல்ல

* செந்தில் காமெடி பாணியில் நயினார் நாகேந்திரன் பதில்

சென்னை: தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் சம்பவத்தில் பிடிபட்டவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் தான். ஆனால், அந்த பணம் என்னுடையதல்ல என்று பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காமெடி நடிகர் செந்தில் பாணியில் பதில் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6ம் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.

அந்த பணம் சட்டமன்ற பாஜ தலைவரும், திருநெல்வேலி பாஜ வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரை கைது செய்து, நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர். இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு கடந்த 22ம் தேதி நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2வது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி:

வருகிற 2ம் தேதி விசாரணைக்கு கூப்பிட்டு இருக்கிறார்கள். இந்த பணம் தொடர்பாக என்னை முழுக்க முழுக்க டார்க்கெட் பண்ணப்பட்டது. இது அரசியல் சூழ்ச்சி என்று தான் நான் சொல்வேன். தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு மேல் பிடித்து இருக்கிறார்கள். 4 கோடி ரூ.ாய் பிடிபட்ட விவகாரத்தில் என் பெயரையும் சேர்த்து பேசும் பொருளாக்கி வருகின்றனர். அது என் பணம் இல்லை. நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு போகிறேன் என்று யாரோ சொன்னால் நான் பொறுப்பு ஏற்க முடியாது.

அந்த 3 பேர் மட்டுமல்ல. நிறைய பேர் எனக்கு தெரிந்தவங்க, சொந்தக்காரர்கள் தான். நான் வரும் 2ம் தேதி நேரில் ஆஜராவேன். தேர்தலுக்காக வேறு மாநிலத்தில் எனக்கு பொறுப்பு போட்டு உள்ளார்கள். இதனால், விரைவில் போலீசாரிடம் பதில் சொல்லுவேன். அதற்கு முன்னாடி கூட தேதி கேட்டு ஆஜராவேன். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் சம்பவத்தில் பிடிபட்டவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் தான். ஆனால் அந்த பணம் என்னுடையதல்ல என்று பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காமெடி நடிகர் செந்தில் பாணியில் பதில் கூறியுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரத்தில் பிடிபட்டவர்கள் தெரிந்தவர்கள்தான்… ஆனா, பணம் எனக்கு சொந்தமானது அல்ல appeared first on Dinakaran.

Related Stories: