மதரீதியான பிளவை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி; பிரிவினைவாத பேச்சின் அடிப்படையில் எங்கும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்திபவனில் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: தாலியை பற்றி பேசிய மோடியை கண்டித்தும், இந்திரா காந்தியை பற்றி பேசிய மோடியை கண்டித்தும் தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் இன்று மாலை சென்னையில் போராட்டம் நடைபெறும். பிரிவினைவாத பேச்சுக்களை பிரதமர் மோடி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அவரது கொடும்பாவியை தினம் தினம் எரித்து போராட்டம் நடத்துவோம் என அவரை எச்சரிக்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மதரீதியான பிளவை ஏற்படுத்துவதற்கும், கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதற்கும் நரேந்திர மோடி முயல்வது அப்பட்டமாக இந்திய மக்களுக்கு தெரியவந்துள்ளது. ஏற்கனவே பின்புலமாக இருந்த ஆர்எஸ்எஸ்சின் கருத்துக்களை, சித்தாந்தங்களை அங்கங்கே விதைத்து வந்த பிரதமர் மோடி இப்போது நேரடியாக மதரீதியான பிளவை ஏற்படுத்தி இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் பிரச்னையை கையில் எடுத்துள்ளார்.

இதை வன்மையாக தமிழக காங்கிரஸ் கண்டிக்கிறது. அவரது இந்த பேச்சின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியை எங்கும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது. யாராவது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை மீறினால் எப்படி தடை விதிக்கிறார்களோ அதேபோன்று மோடிக்கு தடை விதிக்க வேண்டும். அவர் மதக் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இது தமிழக காங்கிரஸ் கட்சியின் பகிரங்க குற்றச்சாட்டு. இது தேசத்தை பிளவுபடுத்தும் முயற்சி. எந்த இடத்திலும் காங்கிரஸ், காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் இந்த நாட்டின் மக்களுக்கு நலனுக்காக தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை திரித்து உண்மைக்கு புறம்பாக கூறி மக்களை திசை திருப்பும் முயற்சியில் இறங்கி இப்போது மிகப் பெரிய படுதோல்வியை அவர் சந்தித்துள்ளார்.

இந்துக்கள் எல்லாம் இவரை நம்புவது போலவும், இந்துக்கள் எல்லாம் இவர் பின்னாடி இருப்பது போன்ற ஒரு மாயை ஏற்படுத்துகிறார். ஒரு போதும் இந்து மக்கள் தேச விரோத சக்திகளை அனுமதிக்க மாட்டார்கள். இந்த நாடு பன்முகத் தன்மை கொண்டது. மோடி இப்படி பிரிவினை வாதத்தையும், மத வாதத்தையும் தூண்டி விடும் செயலில் ஈடுபட்டிருப்பதால் இந்திய தேர்தல் ஆணையம் அவரை பிரச்சாரம் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக புதிதாக நியிமிக்கப்பட்டுள்ள ஹசீனா சயத் சத்தியமூர்த்திபவனில் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, ெசார்ணா சேதுராமன், ஆனந்த் சீனிவாசன், பொருளாளர் ரூபி மனோகரன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மதரீதியான பிளவை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி; பிரிவினைவாத பேச்சின் அடிப்படையில் எங்கும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: