பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் பீகாரில் பரபரப்பு

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19ல் துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக கடந்த 19ம் தேதி 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நாளை 5 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்துள்ளது. நாளை தேர்தல் நடைபெற உள்ளதால் பீகாரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இளம் தலைவராக இருப்பவர் சவுரவ் குமார். பாட்னாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அவரது நண்பருடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது, திடீரென பைக்கில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், இருவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா கட்சி நிர்வாகி சவுரவ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சவுரவ் குமார் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர். தேர்தல் நேரத்தில், ஐக்கிய ஜனதா கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் பீகாரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: