ரெண்டு பேருக்கும் கொம்பு ஊதும் சின்னமா? சரத்பவார் மகள் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சின்னத்தால் குழப்பம்: தேர்தல் ஆணையத்தில் புகார்

புனே: பாராமதி சுயேட்சை வேட்பாளருக்கும் கொம்பு ஊதும் மனிதன் போன்ற சின்னம் ஒதுக்கியது குறித்து தேர்தல் ஆணையத்தில் சரத் பவார் கட்சி புகார் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்து விலகிய அஜித் பவாருக்கே கட்சியின் பெயர், சின்னம், கொடி ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து சரத்பவார் தலைமையிலான கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) என்று அறிவித்த தேர்தல் ஆணையம், மக்களவை தேர்தலையொட்டி அந்த கட்சிக்கு கொம்பு ஊதும் மனிதன் சின்னத்தை ஒதுக்கியது. சரத்பவார் மகள் சுப்ரியா சுலே அங்குள்ள பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு மே 7ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரும் போட்டியிடுவதால் மகாராஷ்டிரா தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் பாராமதி தொகுதியில் போட்டியிடும் ஷேக் சோயல்சா யூனுஸ்ஷா என்ற சுயேட்சை வேட்பாளருக்கு கொம்பு ஊதும் மனிதன் போன்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சரத் சந்திரபவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், “இரண்டு சின்னமும் ஒரேமாதிரி இருப்பது வாக்காளர்களை குழப்பும் என்பதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post ரெண்டு பேருக்கும் கொம்பு ஊதும் சின்னமா? சரத்பவார் மகள் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சின்னத்தால் குழப்பம்: தேர்தல் ஆணையத்தில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: