அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி திட்டம்: ஆதரவாளர்களை திரட்டுகிறார்: பரபரப்பு தகவல்கள்

திருச்சி: மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தோல்வி உறுதி என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி திட்டம் வகுத்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வந்ததில் இருந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சசிகலா ஒதுங்கி உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அது நடக்கவில்லை.

டிடிவி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனி அணியாக செயல்படுகின்றனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்த இருவரும் பாஜக அணியில் இணைந்து போட்டியிட்டனர். அதிமுக, தேமுதிகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மக்களவை தேர்தலில் வாக்களித்த பின், பேட்டியளித்த சசிகலா, வாக்கு எண்ணிக்கைக்கு பின் தவறு செய்தவர் திருந்துவார் என்று எடப்பாடியை மறைமுகமாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதும், பொது செயலாளராக ஆன பின்பும் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைந்து விட்டது. இப்போது மக்களவை தேர்தலிலும் தோற்றால், தொண்டர்கள் கடும் விரக்தியடைவார்கள். எடப்பாடி மீது கோபம் ஏற்படும். இதை பயன்படுத்தி அதிமுகவை கைப்பற்றலாம் என சசிகலா திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இப்போதே தனது ஆதரவாளர்கள், தொண்டர்களை திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

எனவே ஆதரவாளர்களை திரட்டுவதற்காக சசிகலா அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதன்படி, விண்ணப்பம் ஒன்றை அச்சடித்து தனது ஆதரவாளர்களிடம் வழங்கி, அதிமுகவினரிடம் கொடுத்து பூர்த்தி செய்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த விணப்பத்தில் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், தாங்கள் சார்ந்திருக்கும் ஒன்றியம், சட்டமன்ற தொகுதி, கல்வி தகுதி, வயது, வகுப்பு, கட்சியில் இணைந்த ஆண்டு, 1-1-2017 அன்று கட்சியில் வகித்த பொறுப்பு, தற்போது இதர அமைப்பில் செயல்படுபவராக இருந்தால், அந்த அமைப்பின் பெயர் ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

கட்சியினர் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சசிகலாவின் முகாம் அலுவலகமான 95, ஜெயலலிதா இல்லம், போயஸ் கார்டன், சென்னை 86 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நேரிலோ அல்லது கடிதம் மூலமோ அனுப்ப முடியாதவர்கள் இத்துடன் இணைத்துள்ள லிங்க்கை பயன்படுத்தி தங்களது விவரங்களை அனுப்பலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேண்டுகோளில் சசிகலா தன்னை அதிமுகவின் பொது செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளார். விண்ணப்பங்கள் வருவதை பொறுத்து அதிமுகவில் தனக்கு செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப காய்களை நகர்த்தி அதிமுகவை கைப்பற்றலாம் என சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி சசிகலா வட்டாரத்தில் விசாரித்த போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து விடலாம் என்பது தான் சசிகலாவின் எண்ணமாக இருந்தது. ஆனால் எடப்பாடியின் போக்கு அப்படியில்லை. தான் மட்டுமே அதிமுக என கருதுகிறார். சசிகலா கட்சிக்குள் மீண்டும் வந்தால், தனக்கு முக்கியத்துவம் குறைந்து விடும் என நினைக்கிறார். இதனால் சசிகலா கோரிக்கைகளை அவர் ஏற்கவில்லை. இதனால் தான் தினகரன், ஓபிஎஸ்சை இணைத்து அதிமுகவை கைப்பற்றும் முடிவுக்கு சசிகலா வந்துள்ளார். ஆதரவாளர்களை திரட்டுவதற்காக சசிகலா தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம், அனைத்து மாவட்ட ஆதரவாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின் சசிகலா அதிரடி நடவடிக்கையில் இறங்குவார் என்று கூறினர். சசிகலாவின் இந்த திடீர் நடவடிக்கை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி திட்டம்: ஆதரவாளர்களை திரட்டுகிறார்: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: