சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று மாலை சித்தர்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காட்டிற்குள் செல்ல தடை விதிப்பு

*வனத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சேலம் : சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று மாலை சித்தர்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காட்டிற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் உள்ள சித்தர்கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்துவார்கள். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாள் இன்று (23ம் தேதி) வருகிறது. இதனால், சேலம் சுற்றுவட்டார பகுதி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சித்தர்கோயில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சமலையில் இருக்கிறது. அதனால், காட்டிற்குள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சித்தர்கோயிலுக்கு வரும் பக்தர்கள், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல ஏற்கனவே வனத்துறை தடை விதித்துள்ளது. இதன்படியே மலையில் ஏறும் பக்தர்களிடம் வனத்துறை சோதனைச்சாவடி பகுதியில் வைத்து பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதில், பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பி வரும்போது பெற்றுச் செல்ல டோக்கன் வழங்குகின்றனர்.

நடப்பாண்டு சித்ரா பவுர்ணமிக்கு இன்று (23ம்தேதி) மாலை 3மணி முதல் அதிகளவு பக்தர்கள் வர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருப்பதால், அவர்கள் காட்டிற்குள் சென்று சமையல் செய்வது, ஆங்காங்கே அமர்ந்திருப்பது போன்றவற்றை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மலை அடிவாரத்தில் இருந்து சோதனைச்சாவடி வரையுள்ள மலைப்பாதையில் கம்பு கட்டிவிட்டு, அதன் வழியே மேலே பக்தர்கள் ஏறிச்செல்ல வழிவகை செய்துள்ளனர்.

வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே காட்டிற்குள் புகுந்து செல்ல முடியாது.அதேபோல், சித்தர்கோயில் உள்ள மலையின் மேல் பகுதியிலும், கோயிலை சுற்றியுள்ள இடத்தை தவிர பிற பகுதிக்கு, அதாவது அடர்ந்த காட்டிற்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி உத்தரவின் பேரில் சேர்வராயன் தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் 25க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுகின்றனர். இவர்கள், காட்டிற்குள் பக்தர்கள் செல்வதை தடுக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமிநாளில் சித்தர்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காட்டிற்குள் சென்று அமர்ந்துகொண்டு, சமையல் செய்கின்றனர். சிலர் தேவையில்லா சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள காட்டிற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. காரணம், தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் செடி, கொடி, மரங்கள் காய்ந்துள்ளது. யாரேனும் சமையல் செய்கிறேன் என்ற பெயரில் தீயை பற்ற வைத்து போட்டுவிட்டால், கஞ்சமலையே எரிந்து நாசமாகிவிடும். அதனால் தான், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் காட்டிற்குள் செல்லக்கூடாது என அறிவுறுத்தி, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்,’’ என்றனர்.

The post சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று மாலை சித்தர்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காட்டிற்குள் செல்ல தடை விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: