மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

போடி : போடி அருகே மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.போடி அருகே போடிமெட்டு மலைப்பகுதியின் அடிவாரத்தில் சிறப்பு வாய்ந்த பரமசிவன் மலை மற்றும் கோயில் அமைந்துள்ளது. இதன் பின்பகுதியில் சுமார் 4 கி.மீ தூரத்தில் மங்களக்கோம்பை என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்திற்கு செல்லும் மலைச்சாலையின் இருபுறமும் சுமார் 5000 ஏக்கருக்கு மேலாக மா மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன.

போடி பகுதியைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தினந்தோறும் பரமசிவன் மலையடிவார சாலையில் போடி முந்தல் சாலை, ஆண்டி ஓடை பிரிவு, மங்களக்கோம்பை வழியாக தினந்தோறும் தோட்டத்திற்கு சென்று வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர் டூவீலர்கள் மற்றும் ஜீப்புகளிலும் சென்று தோட்டப்பணிகளை மேற்கொள்கின்றனர். இப்பகுதியில் மா மற்றும் தென்னந்தோப்புகளுக்குள் பலரும் வீடுகள் கட்டி வசிக்கின்றனர். இங்குள்ள மங்களக்கோம்பை சாலையின் ஒருபகுதி போடி ஊராட்சி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சிக்கு சொந்தமானது. பரமசிவன் மலையடிவாரம் கடந்து சுமார் 4 கி.மீ கிலோ தூரம் போடி மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதியாக இருக்கிறது.

இச்சாலையில் போக்குவரத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் சுமார் தார்ச்சாலை மற்றும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டன.போடிமெட்டு மலைச்சாலையில் எட்டாவது கொண்டை ஊசி வளைவில் இருக்கும் புலியூத்து ஊற்றுப்பகுதியில் மலைகளிலிருந்து வரும் தண்ணீர் சேர்ந்து போடிமெட்டு மலைச்சாலையின் குறுக்கே உள்ள பெரும் பாலத்தின் அடிவாரம் வழியாக சுமார் 20 கி.மீ தூரம் கொண்ட புலியூத்து ஆற்றின் அகன்ற கால்வாய் செல்கிறது.

மழைக்காலங்களில் மங்களக்கோம்பை வழியாக புலியூத்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனால் போக்குவரத்து பாதிக்காத வகையில், பரமசிவன் மலையடிவார பகுதியில் புலியூத்து ஆற்றின் குறுக்கே, தாழ்வான சிமெண்ட் தடுப்பணை கட்டப்பட்டது.ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த சிமெண்ட் தடுப்பணை மற்றும் அதன் தளம் முழுமையாக சேதமடைந்து தற்போது பாறைகளாக மட்டுமே கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தவிக்கின்றனர்.

மேலும் கோடை காலத்திலும் இப்பகுதி வழியாக தண்ணீர் வரத்து சிறிதளவு இருக்கும். இதன் எதிரொலியாக இதனை கடந்து செல்வது சற்று கடினமானதாகவே உள்ளது. எனவே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

The post மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை appeared first on Dinakaran.

Related Stories: