சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலை எதிர்த்து 11 ஆண்டுக்கு பின் மறு ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது. இது நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா, அவரது மனைவி தரப்பில் மூத்த வக்கீல் சீனிவாசன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், சட்டப் பிரிவுகளின் கீழ் மேல் விசாரணைக்கு உத்தரவிட மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது.

வழக்கு தொடர்வதற்கு ஏற்கனவே வழங்கிய அனுமதியை திரும்பப் பெற முடியும். விடுவிக்கக் கோரிய மனு மீது முடிவெடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் ஆதாரங்களை ஆய்வு செய்யத் தேவையில்லை. விடுவித்து பிறப்பிக்கப்படும் உத்தரவில் காரணங்களைத் தெரிவிக்க அவசியமும் இல்லை. சபாநாயகர், அரசு தலைமை வழக்கறிஞர், குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே வழக்கு தொடர அளித்த அனுமதியை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது.

2012ல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம், 11 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மரணமடைந்து விட்டனர். பல சாட்சிகளும் இறந்து விட்டனர். நீண்ட காலஇடைவெளிக்குப் பின்பு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சிவகங்கை நீதிமன்ற உத்தரவில் தலையிடுவதை இந்த நீதிமன்றம் தவிர்க்க வேண்டும் என்றார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை வாதங்களுக்காக விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலை எதிர்த்து 11 ஆண்டுக்கு பின் மறு ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: